கோவில்பட்டி குடோனில் பயங்கர தீ விபத்து 25 ஆயிரம் சத்துணவு முட்டைகள் எரிந்து சேதம்

கோவில்பட்டி : கோவில்பட்டி யூனியன் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு சத்துணவு  திட்டத்திற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் முட்டைகள் எரிந்து  சேதமடைந்தன.கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படும் 117 மையங்களில்  உள்ள குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக  லாரிகளில் கொண்டு வரப்படும் முட்டைகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்  உள்ள ஒரு கிட்டங்கியில் இருப்பு வைக்கப்படுவது வழக்கம். இதே போல் நேற்று முன்தினம் காலை 1530 அட்டைகளில் தலா 30 முட்டைகள் என மொத்தம் 45,900 முட்டைகள் லாரியில்  கொண்டு வரப்பட்டன. அன்றைய தினமே 32 மையங்களுக்கு 700 அட்டைகள், அதாவது 21  ஆயிரம் முட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டன. மீதமுள்ள 24,900 முட்டைகள்  இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இம்முட்டைகளை நேற்று மதியம்  மையங்களுக்கு எடுத்துச் செல்ல ஊழியர்கள் வந்தனர். அப்போது முட்டைகள்  வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து புகை வெளியேறியது. உடனடியாக கோவில்பட்டி  தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர்  (பொறுப்பு) மனோஜ்குமார் தலைமையிலான வீரர்கள் வந்து பார்த்தபோது, முட்டைகள்  வைக்கப்பட்டிருந்த அட்டைகளில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

உடனடியாக  தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். முட்டைகள்  வைக்கப்பட்டிருந்த கிட்டங்கி அருகே கிடந்த குப்பையில் பற்றிய தீயில்  இருந்து, தீப்பொறிகள் விழுந்து முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த  அட்டையில் தீப்பிடித்துள்ளது தெரியவந்தது. தீ விபத்தில் கிட்டங்கியில்  இருந்த 24,900 முட்டைகளும் சேதமடைந்தன.

Related Stories: