21 மாத காலத்தில் தமிழகத்தில் 510 கோயில்களில் குடமுழுக்கு: ரூ.4000 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு.! அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.4000 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆய்வு நடத்திய பின் அமைச்சர் பேட்டியளித்தார். நாகர்கோவில்: தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மற்றும் குமாரகோவிலில் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் நாகர்கோவிலில் அவர் அளித்த பேட்டி: குமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகள் கடந்த பழமையான கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.15 லட்சம் என 100 கோயில்களில் திருப்பணிகள் செய்ய ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின்போது சேதமடைந்த பகுதிகளை சரிசெய்ய ரூ.1 கோடியே 8 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகளை பார்வையிடவே தற்போது வந்துள்ளேன். வரும் ஏப்ரல் 24, 25, 26 தேதிகளில் இந்த திருப்பணிகள் நிறைவுபெறும். 21 மாத காலத்தில் தமிழகத்தில் 510 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.4,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் ஆக்ரமிப்பின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு எட்டப்படும் என்றார். இதற்கிடையே முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் மிசா சோமன் ஆகியோர் உள்பட இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் சேகர்பாபுவை இன்று சந்தித்து பேசினர். மண்டைக்காடு கோயிலில் இந்து சமய மாநாடு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து அவர்கள் பேசியதாக தெரிகிறது.

Related Stories: