ஓடி விளையாடு பாப்பா...குழந்தைகளுக்கான பயிற்சிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகளின் வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சியை மட்டுமல்லாது அவர்களின் உணர்வுகளின் வளர்ச்சி, நடத்தை, ஆளுமை, அறிவாற்றல், பேச்சு, மொழி, சமூகத் தொடர்பு ஆகிவற்றில் உருவாகும் வளர்ச்சியையும் குறிக்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கையை  அடைவதற்கு நமது குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிகளைப் பற்றி புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாக மரபியல், சுற்றுச்சூழல், ஹார்மோன்கள், பாலினம், உடற்பயிற்சி, ஊட்டச்சத்து ஆகிய காரணிகள் உள்ளன. மேலே சொன்ன காரணிகளை விளக்குவோம் என்றால், பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் பகிரப்படுவதன் மூலம் அவர்களின் உடல் பண்புகளின் வளர்ச்சி தீர்மானமாகிறது. அதாவது குழந்தைகளின் வளர்ச்சி அதன் பெற்றோரின் மரபணுக்களைச் சார்ந்தது.

மேலும், ஹார்மோன்கள் செயல்பாடும் குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. அதேபோல் ஒரு குழந்தை வாழும் சூழல் அதன் உடல் மற்றும் உளவியல் வளர்ச்சியை நேரடியாகத் தூண்டுகிறது. பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பாலின முறைகள் வேறுபட்டவை. இதுவும் அவர்களின் வளர்ச்சியின் தனித்தன்மையைத் தீர்மானிக்கின்றன.

சீரான  மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு மிக முக்கியமான காரணி என்பதையும் மறுக்க முடியாது. மேலே விவரித்த காரணிகளில் உடற்பயிற்சியானது குழந்தையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், இதுபற்றி பரவலாகப் பேசப்படவில்லை. மிகவும் குறைவாகப் பேசப்பட்ட மற்றும் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட காரணி என்று வருத்தத்துடன் இதனைச் சொல்லலாம்.

ஏற்கெனவே விவாதித்தைப் போல பரம்பரைக் காரணிகள், ஹார்மோன்கள் மற்றும் பாலினம் போன்றவை தீர்மானிக்கப்பட்டவை. மாற்ற முடியாதவை.  ஆனால், குழந்தைகளின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணிகளில் சுற்றுச்சூழல், உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து மட்டுமே மாற்றியமைக்கக்கூடியவை. குழந்தைகளைப் பொறுத்தவரை உடற்பயிற்சி என்று தனியாகச் செய்ய வேண்டியது இல்லை. விளையாட்டுதான் அவர்களுக்கான முழுமையான உடற்பயிற்சி. ஓடியாடி விளையாடும்போதே அவர்கள் உடலின் வளர்சிதை மாற்றம் மிகச் சிறப்பாக வளர்ச்சியடைகிறது.

எனவே, அவர்களுக்கான உடற்பயிற்சியான விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான உடலியல் செயல்பாடுகளை எவ்வளவு விரைவில் ஒரு குழந்தையின் வாழ்வில் அறிமுகப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக அறிமுகப்படுத்துவது நல்லது. இது ஒரு பழக்கமாக மாற வேண்டும். இது அவர்கள் குழந்தையாக இருக்கும்போது மட்டும் அல்லாமல் வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய பயிற்சி என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

விளையாட அனுமதியுங்கள்!

குழந்தைகள் தினசரி இரண்டு மணி நேரத்துக்கு மேலாவது விளையாட வேண்டும். இப்படி விளையாடும்போது வெறுமனே அவர்களின் உடல் திறன் மட்டும் மேம்படுவதில்லை. உளவியல் பாங்கு, இந்த சமூகத்தோடு அவர்கள் தொடர்புகொள்ளும் திறன் போன்றவையும் மேம்பாடு அடைகின்றன.

இன்று, குழந்தைகள் வெளியில் விளையாடுவதையும் மகிழ்ச்சியுடன் சப்தமிடுவதைக் கண்ட பழைய நாட்கள் போய்விட்டன. இன்றைய நவீன உலகில், பெரும்பாலான குழந்தைகள் எலெக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்ஸ்களுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். குழந்தைகள் வெளியில் விளையாடுவதை விட வெப்சீரிஸ் பார்ப்பதிலும், பிளே ஸ்டேஷன் வீடியோ கேம்களில் விளையாடுவதிலும் அதிக ஈடுபாடும், ஆர்வமும் கொண்டுள்ளனர். இது இன்றைய கலாசாரமாகிவிட்டது. இந்தச் சூழலை மாற்ற வேண்டும். ஆரோக்கியமான விளையாட்டுகளே அவர்களை ஆரோக்கியமான தலைமுறையினராக மாற்றும்.

இருவகை விளையாட்டுகள் அல்லது பயிற்சிகள்

குழந்தைகள் இரண்டு வகையான பயிற்சிகள் அல்லது செயல்பாடுகளில் ஈடுபடலாம்.  அவர்களின் தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு கூடுதல் சக்தி மற்றும் அழுத்தத்தைக் கொடுத்து உடல் திறனை

மேம்படுத்திக்காட்டுவது.

உதாரணம்: ஓடுதல், குதித்தல், சைக்கிள் ஓட்டுதல், கிரிக்கெட், கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாடுதல் போன்றவை.இரண்டாவதாக சுறுசுறுப்பான விளையாட்டுக்கள். அவர்கள் வேகமாக நகரவும் விரைந்து செயல்படவும் துரித முடிவெடுக்கவும் தூண்டும் வேடிக்கை விளையாட்டுகள். உதாரணம்: மறைந்து தேடுதல், ஸ்விங் மற்றும் ஸ்லைடுகளைப் பயன்படுத்தி பூங்காக்களில் விளையாடுதல், இசைக்கு நடனமாடுதல், கேட்ச் மற்றும் த்ரோ கேம்கள்.                    

- ஞானதேசிகன்

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் நன்மைகள்

1) வளரும்போது எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடைகின்றன.

2) அவர்களின் இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

3) சிறந்த உடல் தோரணை (Posture), உடல் நெகிழ்வு, உடல் சமநிலை மற்றும் உடல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பை வளர்க்க உதவுகிறது.

4) ஆரோக்கியமான எடையை அதிகரிக்க உதவுகிறது.

5) குழந்தைப் பருவ உடல் பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் அபாயங்களைக் குறைக்கிறது.

6)  அவர்களின் பசி மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.

7) நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது.

8) அவர்களின் உடல் செயல்பாட்டுத் திறன் (Motor skill), கவனம் மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

9) கல்வி செயல்திறனை மேம்படுத்துகிறது.

10) அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் சுயமரியாதை நிரம்பியவர்களாகவும் சமூகத்தை எதிர்கொள்வதற்கான திறன் உள்ளவர்களாகவும் வளர்கிறார்கள்.

11) அவர்கள் சமூக ரீதியாக சிறந்த முறையில் தொடர்புகொள்ள முடிகிறது.

12) அவர்களின் மன ஆரோக்கியம் மேம்படுத்துகிறது.

13) அவர்கள் அதிக நேர்மறை ஆற்றலையும் அதிக ஆற்றல் நிலைகளைக் கொண்டுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

வயதுக்கேற்ற விளையாட்டு!

1 வயதுக்குள்:

குழந்தைகளை நிறைய நேரம் தரையில் விட்டு விளையாடச் செய்ய வேண்டும். இன்னும் எழுந்து நிற்காத குழந்தைகளுக்கு வயிற்று நேரம்(TUMMY TIME) பயிற்சிகளை முயற்சிக்கலாம். அதாவது, குழந்தையைப் குப்புறப் படுக்கவைக்கச் செய்வது. இப்படிச் செய்யும்போது குழந்தையின் கழுத்து எலும்புகள், தோள் எலும்புகள் உறுதியாகின்றன. மேலும், குழந்தைகளுக்கு நகர்வதற்கான மன உந்தம் உருவாகும். தாய்ப்பால் மட்டுமே உண்டு. அது செரிப்பதற்கான உடல் செயல்பாடுகள் இல்லாத குழந்தைகள் உடல்வலியால் அவதிப்படுவார்கள். இதனால் வளர்ச்சி பாதிக்கும். இந்த டம்மி டைம் செயல்பாடு அவர்களுக்கு உடல் வலியைப் போக்கி நல்ல உறக்கத்தைத் தரும். உறக்கமே வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளுக்கு நல்லது.

வயது 1-3 ஆண்டுகள்

பந்து வீசுதல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், படிக்கட்டுகளில் ஏறுதல் போன்ற ஆற்றல்மிக்க விளையாட்டில் அவர்களை ஈடுபடுத்துங்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது சுறுசுறுப்பாக அவர்கள் இயங்க வேண்டும். விளையாட்டுகளை சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் ஆக்குங்கள். அது அவர்களைத் தூண்டும்.

வயது 3-5 ஆண்டுகள்

குதித்தல், ஒற்றைக்காலில் நிற்பது, துள்ளல், பின்னோக்கி நடப்பது, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், யோகா வகுப்புகள், நடன வகுப்புகள் போன்ற செயல்கள்.இந்த வயதினரும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.

வயது 5-18 ஆண்டுகள்

குழந்தைகள் ஒரு வாரத்தில் குறைந்தது 3 நாட்களுக்கு ஒரு நாளில் 2-3 மணிநேரம் விளையாட அல்லது சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், பூப்பந்து, நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்கிப்பிங், விளையாட்டு மைதானத்தில் குழு விளையாட்டுகள், நடனம், கராத்தே போன்ற செயல்பாடுகள் அவசியம். பள்ளி அல்லது அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து செல்வது, செல்லப் பிராணியுடன் நடப்பது, பெற்றோருடன் அதிகாலையில் நடப்பது மற்றும் பறவைகளைப் பார்த்து ரசிப்பது போன்றவையும் ஆரோக்கியமான பழக்கங்களே.

பெற்றோர்கள் உங்கள் குழந்தையின் வயது மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில், அவர்களின் ஒரு வயதிலேயே சுறுசுறுப்பாக செயல்படும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது அவர்களுக்கு வாய்ப்பளித்து, நடவடிக்கைகளில் அல்லது விளையாடுவதில் அவர்களை ஈடுபடுத்துங்கள்.

உங்கள் குழந்தைகளுடன் நீங்களும் சேர்ந்து ஈடுபடுவதும் முக்கியம். மேலும் அவர்கள் உங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்வதற்கு இந்தப் பழக்கத்தை நீங்களும் பின்பற்றத் தொடங்குங்கள். கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் உடற்பயிற்சி மற்றும் உடல் சார்ந்த செயல்பாடுகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்குங்கள்.இளமையில் பழக்கத்தைத் தொடங்கினால், எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தலாம்.

Related Stories: