அதானி குழும விவகாரம் மோடியின் தலைமையை பலவீனமாக்கும்: உலகின் முன்னணி தொழிலதிபர் ஜார்ஜ் சொரோஸ் பேச்சு

புதுடெல்லி: ‘அதானி விவகாரம், கூட்டாட்சி அரசின் மீதான பிரதமர் மோடியின் பிடியை பலவீனப்படுத்தும். இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தில் மோடி பதிலளிக்க வேண்டும்’ என உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஜார்ஜ் சொரோஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள போர்’ என பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது. உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அமெரிக்க-ஹங்கேரிய கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் (92), ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் நேற்று முன்தினம் பேசுகையில், ‘‘பிரதமர் மோடியும் தொழிலதிபர் அதானியும் நெருங்கிய கூட்டாளிகள்.

அதானி பங்கு மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இதனால் அவரது நிறுவன பங்குகளின் மதிப்பு சீட்டுக் கட்டு போல் சரிந்தன. ஆனால், மோடி இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கிறார். இது இந்தியாவில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது. எனவே, பிரதமர் மோடி வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். இந்த விவகாரம், கூட்டாட்சி அரசின் மீதான மோடியின் பிடியை கணிசமாக பலவீனப்படுத்தும். நிறுவன சீர்திருத்தங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும். இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.

இந்தியா மீதான போர் என பாஜ கண்டனம்: ஜார்ஜ் சொரோசின் பேச்சுக்கு பாஜ தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜ பெண் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஸ்மிருதி இரானி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஜார்ஜ் சொரோஸ் பிரதமர் மோடியை மட்டுமல்ல, இந்திய ஜனநாயக அமைப்பின் மீதும் குறிவைத்துள்ளார். சொரோஸ் நமது ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். சில நபர்களால் அரசை வழிநடத்த விரும்புகிறார். இத்தகைய தனது தீய திட்டங்களுக்காக ரூ.100 கோடி வரை செலவழிக்க திட்டமிட்டுள்ளார்.

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து வரும் இந்த நேரத்தில், அமெரிக்கா, பிரான்ஸ் அதிபர்கள் மற்றும் இங்கிலாந்து பிரதமர் போன்ற உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் நிலையில், நமது ஜனநாயகத்தை பூதாகரமாக்க சொரோஸ் முயற்சிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது இந்தியாவுக்கு எதிரான போர். இந்த தீய நோக்கத்தை நாட்டின் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு சமூகமும் கண்டிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

* காங். கருத்து

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘பிரதமருடன் தொடர்பு கொண்ட அதானியின் ஊழல் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை தூண்டுமா என்பது முழுக்க முழுக்க காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் மற்றும் நமது தேர்தல் செயல்முறையை சார்ந்தது. அதற்கும் ஜார்ஜ் சொரோசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொரோஸ் போன்றவர்கள் நமது தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்க முடியாது என்பதை எங்கள் நேருவின் மரபு உறுதி செய்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories: