முல்லைப்பெரியாற்றிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு முல்லைப்பெரியாற்றிலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணிகளை பண்ணைப்பட்டியில் உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே லோயர்கேம்பிலிருந்து மதுரை மாநகராட்சிக்கு முல்லைப்பெரியாறு குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணிகள், செக்கானூரணி அருகில் உள்ள பண்ணைப்பட்டியில் நடந்து வருகிறது. இப்பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளர்,  தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நீரஜ்மித்தல், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு லோயர்கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் பிரதானக் குழாய் பதித்தல், பண்ணைப்பட்டி 125 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், செக்கானூரணி அருகே உள்ள பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை மாநகர் வரை 54 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாய் பதித்தல், 38 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கண்ணாபட்டி பகுதியில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மேற்கண்ட பணிகளை உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், பெரியார் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்று வரும் வணிக வளாக பணிகளையும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அறிஞர் அண்ணா மாளிகை 3வது தளத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையச் செயல்பாடுகளை டுபிட்கோ நிர்வாக இயக்குநர் நீரஜ்மித்தல், மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது டுபிட்கோ மேலாளர் முருகன், கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், நகரப்பொறியாளர் அரசு. செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, உதவி ஆணையாளர் மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: