அதானி குழும மோசடி விவகாரத்தில் ஜேபிசி விசாரணைக்கு பாஜ பயப்படுவது ஏன்? காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: அதானி குழும பங்குச்சந்தை மோசடி விவகாரத்தில் ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிட பாஜ பயப்படுவது ஏன்? என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். அதானி குழும பங்குச்சந்தை மோசடி குறித்து ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம் வௌியிட்ட அறிக்கை அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “அதானி மோசடி பற்றி பாரபட்சமற்ற, நடுநிலையான விசாரணை நடத்த வலியுறுத்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாசுக்கும், செபி இயக்குநர் மதாபி பூரி பச்சு-க்கும் கடிதம் எழுதியுள்ளேன். அதானி மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் ஜேபிசி விசாரணையை எழுப்ப கூட எதிர்க் கட்சியினரை பாஜ அனுமதிக்கவில்லை. இதுபற்றி காங்கிரஸ் தலைவர் கார்கே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசிய கருத்துகளும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. அதானி விவகாரத்தில் மறைக்கவும், பயப்படவும் எதுவும் இல்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடாமல் பாஜ பயந்து ஓடுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories: