பொள்ளாச்சி-கேரளாவுக்கு ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி  கடத்தல் சம்பவத்தை முழுமையாக கட்டுப்படுத்த தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை, டெம்போ மற்றும் லாரிகளிலும் ரேஷன் அரிசி  கடத்தல் ஓரளவு இருந்தது. சமீப காலமாக, பொள்ளாச்சி மற்றும் கோவை வழியாக  கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தை, அதிகாரிகள் கட்டுப்படுத்தி  வருகின்றனர்.

 தற்போது, குடிமைபொருள் வழங்கல்  குற்றப்புலனாய்வுத்துறை (புட்செல்) போலீஸ் கூடுதல் இயக்குனர் அருண்  உத்தரவின்பேரில், பல்வேறு வழித்தடங்களில் கண்காணிப்பு  தீவிரப்படுத்தப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி  வைக்கும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே,  ரயில் மற்றும் பஸ் மூலம் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் நடவடிக்கையிலும்  புட்செல் போலீசார் ஈபட்டனர். இதற்காக அவ்வப்போது, கோவை மற்றும்  பொள்ளாச்சியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் கேரளாவுக்கு செல்லும் ரயில்களில்,  புட்செல் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

 நேற்று  முன்தினம், கோவை மத்திய ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ரயில்களில் புட்செல்  போலீசார் சோதனை மேற்கொண்டதில், மறைவிடத்தில் வைத்திருத்து கேரளாவுக்கு  கடத்த முயன்ற ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அதுபோல், பொள்ளாச்சியில்  உள்ள ரயில்வே ஸ்டேஷனில் பாலக்காடு செல்லும் ரயில்களிலும் சோதனை  மேற்கொள்ளப்பட்டது.

 பொள்ளாச்சி மற்றும் கோவை வழியாக, கேரளாவுக்கு ரேஷன்  அரிசி கடத்தல் சம்பவம் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், நூதன  முறையில் பஸ் மற்றும் ரயில்கள் மூலமும் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தை  முற்றிலுமாக தடுக்கும் நடவடிக்கைக்காக, அவ்வப்போது ரயில், பஸ்களிலும் சோதனை  மேற்கொண்டு, பொது வினியோக திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும்  ரேஷன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்படுவதாக, புட்செல் போலீசார் தெரிவித்தனர்.

600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

புளியம்பட்டி,  ராசக்காபாளையம் உளளிட்ட பகுதிகளில் பொள்ளாச்சி அலகு  புட்செல் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார், ரேஷன் அரிசி கடத்த  பதுக்கப்படகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராசக்காபாளைத்தில் மறைவான இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள்  பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, தலா 50 கிலோ எடையுள்ள  12 மூட்டைகளிலிருந்த மொத்தம் 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். விசாரணையில்,  கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த பதுக்கியது, பாலகிருஷ்ணன் லே அவுட்டை  சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள  வேல்முருகனை புட்செல் போலீசார் தேடி வருகின்றனர்.

49 வழக்குகளுக்கு உடனடி தீர்வு

பொள்ளாச்சி  புட்செல் போலீசார், ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடைய பழைய வழக்குகளை  விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று முன்தினம்,  பொள்ளாச்சி கோர்ட்டில் நடந்த லோத் அதாலத்தில், புட்செல் மூலம்  கொண்டு வரப்பட்ட பல வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில்,  49 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதன் மூலம், ரேஷன் அரிசி  கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு, மொத்தம் ரூ.1.46 லட்சம் அபராதம்  விதிக்கப்பட்டது.

Related Stories: