ஆற்காட்டில் அதிக உயரமாக கட்டப்பட்டது நவீன தொழில்நுட்பத்துடன் பாலம் 2 அடி உயரம் குறைப்பு-40 ஜாக்கிகள் பொருத்தி 6 நாள் இரவு பகலாக பணி

ஆற்காடு: ஆற்காட்டில் அதிக உயரமாக புதிதாக போடப்பட்ட பாலம் நவீன தொழில்நுட்பத்துடன் 2 அடி உயரம் குறைக்கப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டிலிருந்து ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக ஆற்காடு-ஆரணி சாலை உள்ளது. இந்த சாலையில் ஆரணி ரோடு சந்திப்பு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் மீது நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. நாளடைவில் அந்த பாலம் சேதமடைந்ததால் கால்வாயில் கழிவு நீர் தேங்கி சாலைக்கு  வரும் நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை  சார்பில் ₹40 லட்சம் மதிப்பீட்டில் அங்கு புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்றது. ஏற்கனவே இருந்ததை விட நான்கரை அடி உயரத்திற்கு பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் மிகவும் உயரமாக உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக இருக்கும். அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள பல கடைகள் சாலை மட்டத்தை விட தாழ்வாக  உள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பாலத்தின் உயரத்தை குறைக்க வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்ததன் பேரில் எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகராட்சி தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் ஆகியோர் அதிகாரியுடன் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து பாலத்தின் உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பாலத்தின் உயரத்தை எவ்வாறு குறைப்பது என ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது சமூக ஆர்வலர் பென்ஸ் பாண்டியன் கொடுத்த யோசனையின் பேரில் சுமார் 80 டன் எடையுள்ள பாலத்தின் இரண்டு பக்கத்தையும் 40 ஜாக்கிகள் மற்றும் பெரிய கட்டைகளை முட்டுக்கொடுத்து ராட்சத மெஷின்களால் தினமும் 10 பணியாளர்களுடன் இரவு பகலாக பணி நடைபெற்றது. 6 நாட்களில் ராட்சத மெஷின்களால் 2 அடி உயரத்திற்கு பாலம் வெட்டி எடுக்கப்பட்டு  உயரம் குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: