தமிழ்நாட்டில் 74 மெகாமுகாம்கள் மூலம் தனியார் துறையில் 1.18 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் வேலைவாய்ப்பு திருவிழா சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமை துவக்கி வைத்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 18 மாதத்தில் 1800 பேர் வேலைவாய்ப்பை பெற்றனர் என்று தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தனியார் துறை மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மிகவும் பயனளிக்கக்கூடியது என்றார்.

பணி நியமன ஆணைகளை வழங்கி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், தமிழ்நாட்டில் வேலையில்லை என்ற நிலையை மாற்றும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக 74 மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலமாக, 1.18 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற முகாமில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணையை முதல்வர் வழங்கினார். அப்போது, 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டிருந்தார். தமிழ்நாடு தொழில் துறையில் 11வது இடத்தில் இருந்து தற்போது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது என்றார்.

Related Stories: