மதுரை எய்ம்ஸ் தொடர்பாக ஒன்றிய அமைச்சருடன் திமுக எம்பிக்கள் மோதல்: மிரட்டும் வகையில் பேசியதை கண்டித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு

புதுடெல்லி: மதுரை எய்ம்ஸ் தொடர்பாக மக்களவையில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் திமுக எம்பிக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் மாண்டவியா உரிய பதில் அளிக்காமல், மிரட்டும் வகையில் பேசினார். இதை கண்டித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை  கட்டப்படும் என கடந்த 2015ம் ஆண்டு  பட்ஜெட்டில் ஒன்றிய அரசு அறிவித்தது. அதைத்  தொடர்ந்து, 2019ம் ஆண்டு பிரதமர் மோடி  அடிக்கல் நாட்டினார். அதன்  பிறகு மருத்துவமனைக்கான எந்த கட்டுமான பணியும் நடக்கவில்லை. ஆனால், மாணவர்  சேர்க்கையை மட்டும் தொடங்கி, அவர்களுக்கான  வகுப்புகள் ராமநாதபுரம் அரசு  மருத்துவக்கல்லூரியில் நடத்தப்படுகின்றன.

மதுரை  எய்ம்ஸ் அறிவிப்புக்குப் பிறகு, பாஜ ஆளும் மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட பல எய்ம்ஸ் கல்லூரிகள் பல்லாயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் பல்வேறு காரணங்களை கூறி ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள்  தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவையில் நேற்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, ‘‘இந்தியாவில் எத்தனை கல்லூரிகள் எந்த உள்கட்டமைப்பும் இல்லாமல் தொடங்கப்பட்டுள்ளன? பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட எத்தனை கல்லூரிகள், ஒரே ஒரு செங்கல் நடப்பட்டு, அதன்பின் எந்த கட்டுமான பணியும் நடக்காமல் உள்ளது?’’ என கேள்வி எழுப்பினார். உடனே திமுக எம்பி தயாநிதி மாறன் எழுந்து, ‘‘இது மதுரை எய்ம்ஸ் பற்றிய விவகாரம்’’ என ஒன்றிய அமைச்சருக்கு நினைவுபடுத்தினார்.

இதனால் ஆளுங்கட்சி எம்பிக்கள் ஆத்திரமடைந்தனர் கூச்சலிட்டனர்.

அப்போது பதிலளித்த ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘‘இந்த விஷயத்தை அரசியல் ஆக்குகிறீர்கள். ஏன் தவறான தகவலை தருகிறீர்கள்? இப்போது மதுரை எய்ம்ஸில் எம்பிபிஎஸ் படிப்பு நடக்கிறது. உள்கட்டமைப்பு பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் நிலம் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், கடன் வழங்கக் கூடிய ஜப்பான் சர்வதேச வங்கி அதிகாரிகள் கொரோனாவால் 2 ஆண்டுகள் வர முடியாமல் போனது. இதன் காரணமாக கட்டுமான மதிப்பீடு அதிகரித்தது. தற்போது சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்க ரூ.1900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப்பற்றி பேசுங்கள்’’ என்றார். அமைச்சருக்கு ஆதரவாக ஆளும் தரப்பு எம்பிக்கள் ஆரவாரம் செய்தனர்.

அப்போது குறுக்கிட்ட டி.ஆர்.பாலு, ‘‘இது முற்றிலும் பொய். இந்த விவகாரத்தை முற்றிலுமாக ஆராய்ந்து பாருங்கள். உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, ஆசிரியர்கள் இல்லாத இதுபோன்ற மருத்துவ கல்லூரிகளை அனுமதிப்பது ஒட்டுமொத்த நாட்டிற்கே நல்லதல்ல’’ என்றார். அதற்கு அமைச்சர் மாண்டவியா, ‘‘சிலர் எல்லாவற்றிலும் அரசியல் செய்ய விரும்புகிறார்கள்.

ஆசிரியர்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத மருத்துவக் கல்லூரிகள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான எதிர்வினைதான் இது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களை ஒன்றிய பாஜ அரசு அனுமதிக்காது. தவறிழைக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கையை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்’’ என மிரட்டும் தொனியில் பேசினார். அவரது பேச்சுக்கு ஆதரவாக பாஜ எம்பிக்கள் தங்கள் இருக்கைகளில் எழுந்து நின்றபடி குரல் எழுப்பினர்.

அமைச்சரின் பேச்சை கண்டித்த திமுக எம்பி தயாநிதி மாறன், ‘‘இவர் யார் இப்படி பேசுவதற்கு? கேள்வி கேட்டால், உரிய பதில் தராமல், எங்களையே மிரட்டுகிறார்’’ என கடும் அதிருப்தி தெரிவித்தார். இதனால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சிறிது நேரம் அமளி நீடித்த நிலையில், அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியது சரியா, இல்லையா என்பதை ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார். ஆனாலும், அமைச்சரின் மிரட்டும் வகையிலான திருப்தி தராத பதிலை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரத்தால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: