மும்பை விமான நிலைய பங்குகளை விற்பதற்கு யாரும் வற்புறுத்தவில்லை: ராகுல் குற்றச்சாட்டுக்கு ஜிவிகே குழுமம் மறுப்பு

ஐதராபாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியது போல மும்பை விமான நிலைய பங்குகளை விற்பனை செய்வதற்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்று ஜிவிகே குழுமம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி,  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி ஜிவிகே குழுமத்திடம் இருந்து மும்பை விமான நிலையம் பறிக்கப்பட்டு இந்திய அரசால் அதானிக்கு வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை ஜிவிகே குழுமம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக ஜிவிகே குழுவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மும்பை விமான நிலையத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவானது ஜிவிகே நிர்வாகத்தால் எடுக்கப்பட்டது. எந்த விதமான அழுத்தத்தின் காரணமாகவும் பங்குகள் விற்கப்படவில்லை. விமான நிலைய வணிகத்திற்கான நிதி திரட்ட இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு துணை தலைவர் சஞ்சய் ரெட்டி பேட்டி அளித்திருந்தார்.

அந்த நேரத்தில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி விமான நிலைய வணிகத்தில் ஆர்வம் இருப்பதாகவும், ஜிவிகே குழுமத்துடன் பரிவர்த்தனை செய்ய தயாராக உள்ளதாகவும் கூறி அணுகினார். ஒரு மாத காலத்தில் அனைத்து பரிவர்த்தனையையும் முடிப்பதாக உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார். நிறுவனத்தின் நலன் மற்றும் கடன் கொடுத்தவர்களுக்கு நாங்கள் திருப்பி செலுத்த வேண்டி இருந்ததால் அதானியுடனான வணிகத்தை முடிக்க வேண்டி இருந்தது” என்றார்.

Related Stories: