தமிழகத்தில் பரிசோதனை செய்யப்படாத தரமற்ற காஸ் ஸ்டவ்கள் விற்பனை அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்: குறைந்த விலை என்பதால் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்

சென்னை: தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம் சமீப காலமாக மிகவும் அதிகரிப்பதுடன், குறைந்த விலைக்கு பரிசோதனை செய்யாத காஸ் ஸ்டவ் விற்பனை சூடுபிடித்துள்ளது. தரமானதா, இல்லையா என கூட தெரியாத நிலையில், பொதுமக்கள் வாங்கி வருவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து, விற்பனையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தமிழகத்திற்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தொழில்களை செய்வதற்காகவும், வியாபாரம் செய்வதற்காகவும், வேலை செய்வதற்காகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் செய்வதற்காக வர ஆரம்பித்தனர். மேஸ்திரி, கூலித் தொழிலாளி என அனைத்து பணிகளையும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களே செய்தனர்.  இரவு, பகல் என எதையும் பார்க்காமல்,  தங்குவதற்கு இடமில்லை என்றாலும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திலேயே படுத்து தூங்கி, சமைத்து சாப்பிட்டு தங்கள் வேலைகளை செய்யத் தொடங்கினர்.  

அதனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வீடு கட்டும் உரிமையாளர்கள் இங்குள்ள பொறியாளர் அல்லது மேஸ்திரி ஆகியோரிடம் பணிகளை ஒப்படைத்து விடுகின்றனர்.  இவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை வரவழைத்து குறைந்த சம்பளத்தில், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் ஒரு குடிசை அமைத்துக் கொடுத்து அதிலேயே தங்க வைக்கின்றனர். அதனால், தங்குவதற்கு பணம் செலவு செய்யாமல், ஓட்டலில் வாங்கி சாப்பிடாமல் வாங்கும் சம்பளத்தை அப்படியே ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால், வட மாநிலத்தவர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இன்றைக்கு கட்டுமானப் பணிகள் செய்வது என்றாலே அது வடமாநிலத்தவர்கள் தான் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டனர்.  

அதேபோல், துரித உணவகங்கள் செயல்பட தொடங்கியதும். வட மாநிலத்தவர்கள் வந்த பிறகு தான்,  தமிழகத்தைப் பொறுத்தவரை உரிமையாளர்கள் மட்டுமே தமிழர்கள் மற்றபடி சமையல் மாஸ்டர்,  சப்ளை செய்வது போன்ற அனைத்து வேலைகளையும் இவர்களே செய்கின்றனர்.  அதற்கேற்றபடி ஆட்களை கொண்டு வந்து பணியில் அமர்த்தி விடுகின்றனர்.  துரித உணவகம் என்றாலே அங்கு வட மாநிலத்தவர்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது. அதேபோல், எலக்ட்ரிக்கல்ஸ் கடை, எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர்ஸ் கடைகளையும் வட மாநிலத்தவர்களே அதிகளவில் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.  மொத்த விற்பனை முதல் சில்லரை விற்பனை கடை வரை வடமாநிலத்தவர் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது.

அதேபோல், பானிபூரி கடை, சமோசா கடை, பாப்கார்ன் கடை, பஞ்சுமிட்டாய் கடை என அனைத்து உணவுப் பண்டங்களின் விற்பனையையும் வட மாநிலத்தவர்கள் தான் செய்கின்றனர். செருப்பு, ஷூக்கள், டிராவல் பேக், பெட்ஷீட், பேண்ட், சர்ட், சேலை, வாட்ச் ஆகியவற்றையும் வீடு வீடாக, தெருத்தெருவாக சென்றும் விற்பனை செய்து வருகின்றனர். அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வந்த வட மாநிலத்தவர்கள், தற்போது, ஒவ்வொரு வீட்டிலும் முக்கிய பொருளாக கருதப்படும் காஸ் ஸ்டவ் விற்பனையை தமிழ்நாட்டில் தெருத்தெருவாக கடைகளை போட்டு விற்பனை செய்கின்றனர்.

அரசின் அங்கீகாரம் மட்டுமல்லாது தர சான்றிதழ் பெற்ற எரிவாயு ஸ்டவ்வை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கிறது.  அந்த மாதிரியான தர சான்றிதழ் பெற்ற ஸ்டவ்வில் சமையல் செய்யும்போதே ஒரு சில நேரங்களில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் 3 பர்னர் வைத்த ஸ்டவ்வை கலர் கலராக டிசைன் செய்து நகரின் முக்கிய பகுதிகளில்,  பொதுமக்கள் கூடும் இடங்களில் வட மாநிலத்தவர்கள் கூவி கூவி விற்பனை செய்யும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. காஸ் ஸ்டவ் என்பது தரக்கட்டுப்பாடு மிகவும் அவசியமானது.  ஆனால், அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல்  தயாரித்த ஸ்டவ்வை விற்பனை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட தலைநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் எரிவாயு ஸ்டவ் விற்பனையை தொடங்கியுள்ளனர்.  அதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த எரிவாயு ஸ்டவ் விற்பனை செய்ய வந்துள்ளதாக வட மாநிலத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.  குறைந்து விலைக்கு விற்பனை செய்வதால் அதனை தமிழக மக்கள் ஏமாந்து வாங்கும் சூழ்நிலை உள்ளது.

எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதுபோன்ற தரக்கட்டுப்பாடு இல்லாத ஸ்டவ் எங்கே தயாரிக்கப்படுகிறது.  மொத்தமாக இந்த ஸ்டவ்வை வாங்கி வந்து விற்பனை செய்யும் நபர்கள் யார், யார் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்.  பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எரிவாயு ஸ்டவ் விற்பவர்களை தீர விசாரித்து விற்பனையை தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்த்திட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: