100 சவரன் நகைகளுடன் அடகு கடைக்காரர் ஓட்டம்: குடும்பத்துடன் ராஜஸ்தானில் பதுங்கல்?

பெரம்பூர்: பெரம்பூரில் அடகு கடையில், 100 சவரனுக்கும் மேல் அடகு வைத்த நகைகளை எடுத்துக்கொண்டு கடை உரிமையாளர் ராஜஸ்தானுக்கு குடும்பத்துடன் தப்பி ஓட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் சோமசுந்தரம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் கோவிந்தராம் (38). இவரது சொந்த ஊர் ராஜஸ்தான். தான்தோன்றி அம்மன் கோயில் தெருவில் \”பிரேமா தேவி பான் புரோக்கர்ஸ்\” என்ற பெயரில் கடந்த 5 வருடங்களாக அடகு கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு, நகைகளை அடகு வைத்த திருவிக ராம் நகர் பகுதியை சேர்ந்த கனிமொழி, திருவிக நகர் பகுதியை சேர்ந்த ஷோபனா, ஷர்ஹினா, டில்லிபாய், ஜெயலட்சுமி உள்ளிட்டோர் நகைகளை மீட்க சென்றுள்ளனர்.

அப்போது, கடையில் இருந்த உரிமையாளர் ஆனந்தராம் 2ம்தேதி வந்து நகைகளை பெற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறி அனுப்பி உள்ளார். இதையடுத்து, 2ம்தேதி மீண்டும் சென்று பார்த்தபோது, கடை பூட்டி கிடந்தது. அதனால் மறுநாள் சென்று பார்த்துள்ளனர். அப்போதும், கடை பூட்டி இருந்ததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, கோவிந்தராம் குடும்பத்துடன் நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் செம்பியம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், நகைகளை அடகு வைத்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கனிமொழி 37 கிராம், ஷோபனா 229 கிராம், ஷாஹினா 40 கிராம், டில்லிபாய் 421 கிராம், ஜெயலட்சுமி 45 கிராம் என பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. இவர்கள் அடகு வைத்த நகை  சுமார் 100 சவரத்திற்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அடகு கடை உரிமையாளர் தலைமறைவான விஷயம் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. எனவே, இன்னும் எவ்வளவு பேர், எத்தனை சவரன் நகைகளை அடகு வைத்து ஏமாந்தார்கள் என்பது விசாரணைக்கு பிறகே தெரியும். பல சவரன் நகைளை பறிகொடுத்த அனைவரிடமும் புகாரை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: