நாகை மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து ஒன்றிய அரசின் குழு ஆய்வு: நெல் ஈரப்பதத்தை 22%- ஆக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை..!!

நாகை: நாகை மாவட்டத்தில் ஒன்றிய குழு தனது ஆய்வை தொடங்கியது. நாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து வீணாகியது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நெற்பயிர்களை கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இதனிடையே கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து 3 பேர் கொண்ட ஒன்றிய அரசின் குழு ஆய்வு செய்கிறது.

முதற்கட்டமாக தலைஞாயிறு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் ஒன்றிய குழு குறைகளை கேட்டறிகிறது. சென்னையில் உள்ள  தரக்கட்டுப்பாட்டு மைய அதிகாரி யூனுஸ், பெங்களூரு தரக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் பிரபாகரன், ஒய் போயோ ஆகியோர் அடங்கிய ஒன்றிய குழுவினர் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினர் நெல் மற்றும் பயிர் சேதங்களை ஆய்வு செய்து அதன் மாதிரிகளை தமிழக விவசாயிகளுடன் சேகரித்து அதன் அறிக்கையை தாக்கல் செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்புவார்கள்.

அதனை தொடர்ந்து ஒன்றிய அரசானது ஈரப்பதத்தின் தளர்வு குறித்தான விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிப்பார்கள். தலைஞாயிறை தொடர்ந்து கட்சநகரம், வலிவலம், பட்டமங்கலம், சிரங்குடிபுலியூர் உள்ளிட்ட இடங்களில் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டம் என ஒன்றிய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: