தொழில் உரிமங்களை வணிகர்கள் ஏப். 31க்குள் புதுப்பிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: வணிகர்கள் தங்கள் தொழில் உரிமங்களை ஏப்ரல் 31ம்தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வணிகங்களுக்கு மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன் கீழ் பல பிரிவுகளில் வணிகத்தின் வகைப்பாட்டுக்கு ஏற்றவாறு உரிமங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் உரிமங்கள் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் வழங்கப்பட்டு, அடுத்து வரும் நிதியாண்டிற்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் புதுப்பிக்கப்பட வேண்டும்.

 2023-24ம் நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களை வழக்கமாக, சென்னை மாநகராட்சி உரிமம் ஆய்வாளர்கள் மூலம் மண்டல அலுவலகங்களில் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ளவும், தொழில் உரிமங்களை புதுப்பிக்க நடத்தப்பட்டு வரும் முகாம்களிலும் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வணிகர்களின் நலன் கருதி தொழில்நுட்ப உதவியுடன் சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in, //www.chennai corporation.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், க்யூஆர் கோடு மூலமாகவும் உரிமங்களை தாமாகவே புதுப்பித்துக் கொள்ளும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 எனவே, சென்னை மாநகராட்சி பகுதிகளில் வணிகர்கள் தொழில் உரிமங்களை மார்ச் 31ம்தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளுமாறும், புதிதாக தொழில் வணிகம் தொடங்குவோர் உரிமங்களை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், தொழில் உரிமங்களை புதுப்பிக்க தவறியவர்கள் ஏப்ரல் 1ம்தேதி முதல் உரிமம் இல்லாதவர்கள் எனக் கருதி சென்னை மாநகராட்சி விதியின் கீழ் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிகர்கள் இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: