நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா?.. பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: அதிக கட்டணம் வசூலை தடுக்க நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் கொண்டு வரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் இங்கிருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களிலும், சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட் முக்கிய நகரங்களில் இருந்து வரும் ரயில்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகிறார்கள்.

இவ்வாறு வரும் பயணிகள் ரயில் நிலையத்தில் இறங்கி வாடகை கார்கள், ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கு செல்கிறார்கள். இவ்வாறு பயணம் செய்யும் போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் உள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என கூறி தாறுமாறான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மற்ற நகரங்களை விட நாகர்கோவிலில் அதிக ஆட்டோ கட்டணம் உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மாவட்ட கலெக்டராக ஜோதி நிர்மலா, நாகராஜன் உள்ளிட்டோர் கலெக்டராக இருந்த போது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஆனால் இந்த  திட்டத்துக்கு ரயில்வே துறை ஒத்துழைப்பு வழங்காததால், செயல்படுத்தப்படவில்லை. இதையடுத்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு செல்வதற்கான கட்டணம் தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதே போல் வடசேரி பஸ் நிலையம், மீனாட்சிபுரம் பஸ் நிலையங்களிலும்  ஆட்டோ கட்டணம் தொடர்பான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. ஆனால் இந்த அறிவிப்பு பலகைகள் திடீரென மர்ம நபர்களால் அகற்றப்பட்டது. அதன் பின்னர் முறைப்படுத்தப்படாத கட்டணம் உள்ளது. அதிக  கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது மீண்டும் எழுந்துள்ளது. இதன் மூலம் அதிக கட்டண கொள்ளையை தடுக்க முடியும் என்று பயணிகள் கூறி உள்ளனர். இது தொடர்பாக தற்போது ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பதிலளித்துள்ள அதிகாரிகள், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு திட்டம் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக கூறி உள்ளனர்.

ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் நடைமுறைக்கு வந்தால், அதிகளவில் பயணிகள் கட்டணம் கொடுக்க வேண்டி இருக்காது. ஆட்டோ டிரைவர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் கட்டணம் நிர்ணயம செய்யப்பட்டு, நியாயமான கட்டணம் வசூலிக்கப்படும் என்று பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இந்திய முக்கிய நகரங்களில் ப்ரீ பெய்டு ஆட்டோ திட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீ பெய்டு ஆட்டோ திட்டம் என்றால் என்ன?

ப்ரீ பெய்டு ஆட்டோ திட்டம் நடைமுறைக்கு வந்தால், ரயில் நிலையத்தில் இருந்து இயங்க வேண்டிய ஆட்டோக்கள் அனைத்தும் முறைப்படி ரயில்வே நிர்வாகத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும். பயணிகள் வந்திறங்கியதும், ஆட்டோ கட்டணத்துக்கான கவுண்டர் அமைக்கப்பட்டு இருக்கும். அங்கு சென்று தாங்கள் செல்லும் பகுதிக்கான கட்டணத்தை செலுத்தி, ரசீது பெற வேண்டும். வரிசைப்படி எந்த ஆட்டோ உள்ளதோ? அந்த ஆட்டோவில் ஏறி பயணிக்கலாம். கார்களுக்கும் இது பொருந்தும். இதனால் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக்காது.

கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும்

இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், ஆட்டோ, வாடகை கார் தொழில் பல்வேறு வகையில் நசுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் புதிய விதிமுறைகள் வாகன தொழிலை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளன. பல்வேறு வித கட்டணங்களால் ஆட்டோ டிரைவர்கள் நொடிந்து போய் உள்ளனர். இருப்பினும் பயணிகள் நலன் கருதி நியாயமான கட்டணம் தான் வசூலிக்கிறோம். தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: