சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்?.. உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டது. அதன்படி பேருந்துகள் கொள்முதல் செய்யும் போது மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளையே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவகையான பேருந்துகளும் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக இயக்கப்படும் என்பது தொடர்பான செய்முறை விளக்கத்தை வழங்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில்; 650 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளங்களுடன் கூடிய பேருந்துகளை உற்பத்தி செய்ய ஒரு நிறுவனம் மட்டுமே தயாராக உள்ளதாகவும், அதற்கும் 14 மாதங்கள் ஆகும்.

மேலும் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 442 தாழ்தள பேருந்துகளும் மூன்று மாதங்களில் இயக்கப்படும் என்றும், 100 மின்சார தாழ்தள பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்?  என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories: