சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் போக்குவரத்து நெரிசல்: ஓராண்டுக்குள் சரி செய்யப்படும் என்று மெட்ரோ இயக்குநர் உறுதி

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் காணப்படும் போக்குவரத்து நெரிசல் ஓராண்டுக்குள் சரி செய்யப்படும் என்று மெட்ரோ நிர்வாக இயக்குநர் உறுதி தெரிவித்துள்ளார். போரூர் டி.எல்.எப்., தொழில்நுட்ப பூங்காவில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் வரை சிறிய ரக குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்; அனைத்து பகுதியிலும் மெட்ரோக்கான தூண்கள் எழுப்பப்பட்டதும் சாலைகள் சீர் செய்யப்படும் என்றார்.

சென்னையில் ஒரே நேரத்தில் ரூ.63,000 கோடி மதிப்பீட்டில் 119 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ பணிகள் நடைபெறுவதாக சித்திக் தெரிவித்தார். கோவையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதே போன்று மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்று சித்திக் கூறினார். அரசு ஒப்புதல் கிடைத்ததும் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: