காவிரி டெல்டாவில் அதிக ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: காவிரி டெல்டாவில் அதிக ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.  டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை தருமாறு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் நிலை குறித்தும், இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் அமைச்சர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் சக்கரபாணி, தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளர். பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் பருவம் தவறிய மழையின் காரணமாக 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிற்கு பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாகவும், வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றி அறுவடை  பணிகளை மீண்டும் தொடங்கிட தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, காவிரி டெல்டாவில் நேற்று அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தனர். இந்நிலையில், பயிர்சேதம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். பருவம் தவறி பெய்த மழையால் டெல்டாவில் எவ்வளவு பயிர்கள் சேதம் என்பது பற்றி அமைச்சர்கள் விளக்குகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களின் மாதிரியையும் முதலமைச்சரிடம் காண்பித்து அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை உயர்த்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: