மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமியை 4,560 அடி உயர பருவதமலையில் ஏறி பக்தர்கள் தரிசனம்: 23 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 4,560 அடி உயர பருவதமலையில் உள்ள மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமியை பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர். மேலும் 23 கி.மீ. தூரம் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரத்தில் தென்கயிலாயம் என அழைக்கப்படும் சித்தர்கள் என்றும் காட்சி தரும் பருவதமலை உள்ளது.

இங்கு பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. பவுர்ணமி நாட்களில் தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலையை கிரிவலம் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி நேற்றிரவு முதல் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கோயில்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோயிலில் வழிபட்டு கிரிவலத்தை தொடங்கினர்.

பின்னர் கடலாடி, பட்டியந்தல், வேடப்புலி, வெள்ளந்தாங்கீஸ்வரர், வடகாளியம்மன் கோயில் வழியாக சுமார் 23 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திரன் கோயிலில் மலையேறும் பக்தர்களுக்கு சக்தி கயிறுகள் கட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் செங்குத்தான பருவதமலையில் கடப்பாரைகளை பிடித்து படிகளில் ‘அரோகரா’ பக்தி கோஷத்துடன் மலையேறிச் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் கடன் தீரும் என்பது பக்தர்களின் ஐதீகம் என்பதால் இன்று கோயிலுக்கு வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் திரண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: