டெல்டாவில் தொடர்ந்து மழை 2.28 லட்சம் ஏக்கர் சம்பா, உளுந்து பயிர்கள் மூழ்கியது: சேதம் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு

நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் 2.28 ஏக்கர் சம்பா, உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கியது. தென்கிழக்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி இரவு தொடங்கிய கனமழை கடந்த 2ம்  தேதி வரை நீடித்தது. தொடர் கனமழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1  லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சம்பா பயிர்களில் 40  ஆயிரம் ஏக்கரில் மழை நீர் சூழ்ந்தது. இதனால்  அறுவடை இயந்திரங்கள் இறங்க முடியாமல் எஞ்சியுள்ள சம்பா பயிர்களையும் அறுவடை  செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம்  வேளாங்கண்ணி, தாண்டவமூர்த்திகாடு, காமேஸ்வரம், பூவைத்தேடி, விழுந்தமாவடி,  புதுப்பள்ளி வேட்டைக்காரனிருப்பு, பொய்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 12  ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலையில் ஆயிரம் ஏக்கர் நீரில்  மூழ்கி அழுக தொடங்கியுள்ளது. மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா தாளடி பயிர்கள், 20 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர்கள் முற்றிலும் அழுகும் நிலையில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர், தஞ்சாவூரில் 85,000 ஏக்கர், கரூர் மாவட்டம் குளித்தலை, தோகைமலை சுற்றுவட்டார பகுதிகளில் 5000 ஏக்கர் சம்பா, புதுக்கோட்டை மாவட்டத்தில் 18,000 ஏக்கர் சம்பா, அரியலூரில் அறுவடைக்கு தயாராகி உள்ள 5ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், மக்காச்சோளம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் இணை இயக்குநர் லட்சுமிகாந்தம் தலைமையில் அதிகாரிகள் 2வது நாளாக நேற்று ஆய்வு செய்தனர். தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பயிர்கள் ஆய்வு பணி நடந்து வருகிறது. மழை காரணமாக 1.15 லட்சம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

* பயிர் சேதம் பார்வையிட அமைச்சர்கள் குழு: முதல்வர் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கனமழை காரணமாக தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள தகவல் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மழை தற்போது குறைந்து வருகிறது. தேங்கி நிற்கும் நீரை வடியவைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே, வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு முதல்நிலை ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

நேரடியாக ஆய்வு செய்வதற்காக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும், வேளாண்மைத்துறை செயலாளர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட மூத்த துறை அதிகாரிகளையும் விவசாயிகளை சந்தித்து பேசி விபரங்களைப் பெற அறிவுறுத்தியுள்ளேன். அதன்படி, நாளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை சந்தித்து, சேத விபரங்களை அறிந்து மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீடுத்தொகை பெற்றுத் தருவது குறித்தும், இழப்பீடு வழங்குவது குறித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Related Stories: