தென்காசி கடத்தல் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு; வழக்கை வாபஸ் வாங்கக் கோரி காதல் கணவனிடம் இளம்பெண் கதறல்: `இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுவோம்’ என்று வேண்டுகோள்

தென்காசி: தென்காசி இளம்பெண் கடத்தல் விவகாரத்தில் வழக்கை வாபஸ் வாங்கக் கோரி காதல் கணவனிடம் காதலி கதறும் ஆடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், ‘‘ இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுவோம், நீயும் நல்லா இருப்ப. நானும் நல்லா இருப்பேன் என்று உருகியுள்ளார். தென்காசியை அடுத்த கொட்டாரகுளத்தைச் சேர்ந்த தனியார் சாப்ட்வேர் இன்ஜினியர் வினித்தும், வல்லம் முதலாளி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட நவீன் பட்டேல் மகள் கிருத்திகாவும் 2022ம் ஆண்டு டிசம்பரில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பின்னர் வினித்துடன் வசித்து வந்த கிருத்திகாவை, கடந்த 25ம் தேதி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீடு புகுந்து கடத்திச் சென்றனர். இதுகுறித்து கிருத்திகாவின் பெற்றோர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு முகேஷ் படேல், தினேஷ் படேல், சுப்பிரமணியன் ஆகிய 3 பேர் குற்றாலம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடத்த பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் கிருத்திகா எங்கு  இருக்கிறார்? என்ற விவரம் தெரியாத நிலையில் கடந்த 1ம் தேதி கிருத்திகா பேசிய வீடியோ வெளியானது. அதில் அவர், ‘‘எனது திருமணம் ஏற்கனவே முர்திக் பட்டேலுடன் நடந்து விட்டது.

நான் நலமாக பாதுகாப்பாக  இருக்கிறேன். எனக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. யாரும், என்னை டார்ச்சர் செய்யவும் இல்லை. இது தொடர்பாக அங்கு எந்த பிரச்னையும் வேண்டாம். யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். எனது விருப்பப்படி தான் நடந்தது. யார் மீதும் நடவடிக்கை வேண்டாம்.’’ என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த வினித், ‘‘ ஏதோ நிர்ப்பந்தத்தில் கிருத்திகா பேசுவதை உணர முடிகிறது. நேரில் சந்தித்தால் என்னுடன் வருவார்.’’ என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டில் இந்த வழக்கு கடந்த 1ம் தேதி மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ‘‘குஜராத்தில் கிருத்திகாவை தனிப்படை போலீசார் தேடி வருவதாக’’ குற்றாலம் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கிருத்திகா, வினித்தின் செல்போனுக்கு பேசியுள்ளார். அதில், ‘‘ நான் கிருத்திகா பேசறேன். வினித், இந்த புகாரை வாபஸ் வாங்கிடு. அது உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது. உன் பெற்றோரும், என் பெற்றோரும் நிம்மதியாக இருப்பாங்க. இதோட விட்டு விடலாம். அதற்கு வினித், ‘‘ நீ கிருத்திகா தான் பேசுகிறாயா? அப்படி என்றால் நீ என்னை எப்படி கூப்பிடுவேன் என்பதையும், நான் எப்படி உன்னை கூப்பிடுவேன் என்பதையும் கூறு’’ என்றார். அதற்கு அவர் மாதேஜா என்று உன்னை கூப்பிடுவேன். நீ என்னை பேபி என்று கூப்பிடுவாய் என்கிறார்.

அதற்கு வினித், ‘‘ நீ பயந்து போய் கேசை வாபஸ் வாங்கச் சொல்கிறாய். நீ யாருக்காகவும் பயப்படாதே. நீ தற்ேபாது எங்கிருக்கிறாய்? என்று சொல்.’’ என்கிறார். அதற்கு கிருத்திகா, தன்னுடைய இருப்பிடத்தை தெரிவிக்காமல், ‘‘ நான் நன்றாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். என்னை பற்றி கவலைப்படாதே. நீ கேசை வாபஸ் வாங்கினால் இரு குடும்பமும் நன்றாக இருக்கும்’’ என்பதை பல முறை கதறும் தொனியில் பேசுகிறார். அதற்கு வினித், ‘‘ நாம் இருவருக்கும் நடந்த திருமணம் பற்றி கேட்கையில் கிருத்திகா மவுனம் சாதிக்கிறார். பின்னர் சில நொடிகள் கழித்து கேசை வாபஸ் வாங்கு; அவரவர் வழியில் செல்வோம்.’’ என்கிறார். தன்னுடைய தோழியின் செல்போனில் பேசுவதாக தெரிவிக்கிறார்.

கடைசியாக மனசே இல்லாமல் வினித், ‘‘ இதை நீ இங்கு வந்து நேரில் சொல்லு. நான் வழக்கை வாபஸ் வாங்குகிறேன்.’’ என்பதோடு அந்த ஆடியோ நிறைவடைகிறது. போலீசின் தேடுதல் வேட்டைக்கு பயந்து உறவினர்களின் நிர்ப்பந்தத்தில் கிருத்திகா, தோழியின் செல்போன் மூலம் காதலனிடம் பேசியுள்ளதாக வினித்தின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: