அன்றே வலியுறுத்தியது ‘தினகரன்’ ராமநாதபுரத்தில் விமானநிலையம்

சாயல்குடி: ராமநாதபுரத்தில் விமான சேவை துவங்கப்படும் என ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு எழுத்துபூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற புண்ணிய தலமாக ராமேஸ்வரம் விளங்குகிறது. மேலும் தனுஷ்கோடி, பாம்பன் பாலம், குந்துக்கால் விவேகானந்தர் மண்டபம், அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் ராமநாதபுரம் அரண்மனை, திருஉத்தரகோசமங்கை, தேவிப்பட்டினம் நவபாசானம், திருப்புல்லாணி பெருமாள் கோயில் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இதுபோல கமுதி அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். மேலும் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட தொழிற்நிறுவனங்கள் உள்ளதாலும், கீழக்கரை, தொண்டி, பெரியபட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள், சிங்கப்பூர், மலேசியா, கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வேலை நிமித்தமாக சென்று வருகின்றனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் விவசாயம், மீன்பிடி, பனைமரம் வளர்த்தல் ஆகிய 3 முக்கிய தொழில்களும் ஒருங்கே அமைந்த சிறப்புமிக்க மாவட்டமாக உள்ளது.

மற்ற மாவட்டங்களை விட இங்கு கடல்சார் உணவு உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் கடல் தொழில் அந்நிய செலவாணியில் லாபம் ஈட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது. இதுபோன்று மாவட்டத்தில் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் முண்டு (குண்டு)மிளகாய் உள்ளிட்ட முக்கிய வேளாண் பொருட்களுக்கு பல்வேறு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு. மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனைஓலை கைவினைப்பொருட்கள், நார் உள்ளிட்ட பனை பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடல், விவசாயம், பனைமரம் உள்ளிட்ட மூன்று முக்கிய தொழில்கள் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனாலும் மாவட்டம் பெரிய அளவில் வளர்ச்சியை எட்டாமல் பின்தங்கியே இருக்கிறது. உற்பத்தி வளம் இருந்தும் முறையான சந்தைப்படுத்துதல் இல்லாதது காரணமாக உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைந்தால் சரக்கு விமானம் மூலம் மாவட்டம் தொழில் வளர்ச்சி அடைய நல்ல வாய்ப்பு உருவாகும்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டம் வரும் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் வசதிக்காகவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் ஒன்றிய அரசின் உதான் திட்டத்தில் உச்சிப்புளி பகுதியில் பயணிகள் விமான நிலையம் அமைக்க வேண்டும் வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தஞ்சை, வேலூர், நெய்வேலி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்படும். அதில் ராமநாதபுரத்திற்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் முதற்கட்ட பணிகள் துவங்கவில்லை. கிடப்பில் போடப்பட்டது.

எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கும் பணியை ஒன்றிய அரசு துரிதப்படுத்த வேண்டும் என கடந்த ஜனவரி 9ம் தேதி தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதனையடுத்து ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடலோர காவல்படைக்கு சொந்தமான விமான தளம் உதான் திட்டத்தில் தேர்வாகி உள்ளது. விமான நிலையம் தயாராகி 2 மாதங்களுக்குள் விமான சேவைக்கு ஒன்றிய அரசால் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை மாவட்ட மக்கள் வரவேற்று உள்ளனர்.

Related Stories: