எண்ணூர் பகுதியில் கால்வாய் பராமரிப்பில்லாததால் சாலையில் தேங்கும் கழிவுநீர்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், எண்ணூர், எர்ணாவூர் பகுதிக்குட்பட்ட 1, 2, 3, 4 ஆகிய வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் துணி துவைப்பது மற்றும் குளிப்பது போன்ற தண்ணீரை தெருவில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில் விடுகின்றனர். திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்களை கொண்டு மழைநீர் கால்வாய்களை  பராமரித்து வந்தனர். தற்போது, கடந்த சில மாதங்களாக மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்காததால் சம்பளம் ஏன் தரவில்லை என்று கேட்டதற்கு, அவர்களை பணியிலிருந்து நிறுத்திவிட்டனர்.

இதன் காரணமாக, எண்ணூர், எர்ணாவூர் போன்ற பகுதிகளில் மழைநீர் கால்வாய்களை பராமரிக்க முடியாமல் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தெருக்களில் ஆறுபோல் ஓடுகிறது. இதுபோல், கால்வாயில் நாட்கணக்கில்  நீர் தேங்கியிருப்பதால், கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதுடன், பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகிறது. இந்நிலையில், 2வது வார்டுக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடை வாசலில், கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், உணவு பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

எனவே, உடனடியாக நிறுத்தப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்த ஊழியர்களை, மீண்டும் பணியில் அமர்த்தி கால்வாய்களை முறையாக பராமரிக்க, திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘எண்ணூர் பகுதியில் பல இடங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து, திருவொற்றியூர் மண்டல உதவி செயற்பொறியாளரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பகுதியில் மழைநீர் கால்வாயை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும், மக்களின் பிரச்னைகளை அலட்சியம் செய்யும் உதவி செயற்பொறியாளரை இடமாற்றம் செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories: