நாகர்கோவில் - மணக்குடி சாலையில் ரூ.75 லட்சம் செலவில் 4 சிறிய பாலம் அமைக்கும் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் - மணக்குடி சாலையில் ரூ.75 லட்சம் செலவில் 4 சிறிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு சாலை, பாலப்பணிகள் நடந்து வருகிறது. மணக்குடி சாலையில் வெள்ளாடிச்சிவிளை அருகே மற்றும் குளத்துவிளை பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் சீராக செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கும் நிலை இருந்து வந்தது. தண்ணீர் தேங்காமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் மாநில நெடுஞ்சாலைத்துறை வெள்ளாடிச்சிவிளை அருகே ஒரு சிறிய பாலம், குளத்துவிளையில் 3 சிறிய பாலங்களை ரூ.75 லட்சம் செலவில் கட்டமுடிவு செய்தது.

இதற்கான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. குளத்துவிளையில் சிறிய பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு அங்கு தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றும் பணி நேற்று நடந்தது. இதனை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முத்துராமன் பார்வையிட்டு கூறியதாவது: தண்ணீர் தேங்காமல் இருக்க இந்த பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பாலம் அமைக்கும் பணி நடப்பதால் போக்குவரத்து நெருக்கடி சில நேரங்களில் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து சிறிய பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். என்றார்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, மணக்குடி சாலையில் நடக்கும் 4 கல்வெட்டு(சிறியபாலம்) பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும். இதனை தவிர அஞ்சுகிராமத்தில் பேவர்பிளாக் பதிக்கும் பணி ரூ.7.20 லட்சம் செலவில் நடக்கிறது.  கணபதிபுரம் முருங்கவிளை சாலை ரூ.50 லட்சத்திலும், குலசேகரம் திருவரம்பு சாலை ரூ.3 கோடியே 15 லட்சத்து 58 ஆயிரம் செலவிலும். ஆலுவிளை சிதறால் சாலை ரூ.80 லட்சம் செலவிலும் பணிகள் நடந்து வருகிறது. இதுபோல் பல பணிகள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது என்றார்.

Related Stories: