ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டது ஏன்?

ஈரோடு: அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக செந்தில்முருகன் நியமிக்கப்பட்டது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று காலை பாஜவை கழற்றிவிட்டு ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசுவை அதிமுக வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து கடந்த 10 நாட்களாக வேட்பாளர் யார்? என்ற குழப்பம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளராக செந்தில் முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டார். இவரை, சென்னையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். செந்தில் முருகன் கட்சியில் பெரிய அளவில் அறியப்படாத நபராக இருந்தபோதிலும் முதலியார் சமூகத்தை சார்ந்தவர் ஆவார். ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பவர்கள் முதலியார்கள். ஏற்கனவே அதிமுகவில் முதலியார் சமூகத்திற்கு பிரநிதித்துவம் அளிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியை தங்களது சமூகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது ஓபிஎஸ் அறிவித்துள்ள செந்தில் முருகன் முதலியார் சாதி சங்கத்தில் உள்ளார். மேலும் இவரது தந்தை பாலகிருஷ்ணன் முதலியார் சாதி சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். எனவே அதிமுக இபிஎஸ் அணியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை செந்தில்முருகன் எளிதில் பெற முடியும். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி நிறுத்தி உள்ள வேட்பாளரின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு கருதுகின்றனர். செந்தில் முருகன் பயோடேட்டா செந்தில் முருகன். வயது 42. தந்தை பெயர் பாலகிருஷ்ணன். தாயார் வசந்தா. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஈரோடு வளையக்கார வீதியில் வசித்து வருகிறார். முதலியார் சமூகத்தை சார்ந்தவர். எம்பிஏ நிதி மேலாண்மை படித்த செந்தில்முருகன் லண்டனில் நிதி ஆலோகராக பணியாற்றி வந்தார். கொரோனோ காலகட்டத்தில் இந்தியா திரும்பிய நிலையில் தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். ஒருங்கிணைந்த அதிமுகவில் உறுப்பினராக இருந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் என கட்சி பிரிந்த நிலையில், இவர் ஓபிஎஸ் அணிக்கு மாறினார்.

Related Stories: