திருமுல்லைவாயலில் அரசு பள்ளியை தூய்மைப்படுத்தும் மாணவர்கள்: வீடியோ வைரல்

ஆவடி: திருமுல்லைவாயலில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்பு நேரத்தில் குறிப்பிட்ட ஒரு மாணவர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார். இதுதொடர்பான வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடி அருகே திருமுல்லைவாயல், சோழம்பேடு பகுதியில் நீண்ட காலமாக நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் 8ம் வகுப்புவரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாணவ-மாணவியை தூய்மைப்படுத்தும் பணிகளில் பள்ளி நிர்வாகம் நிர்ப்பந்தப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல், நேற்று பள்ளியில் வகுப்புகள் நடைபெறும் நிலையில், ஒரு குறிப்பிட்ட மாணவர் சீருடை அணிந்தபடி, பள்ளி வளாகம் முழுவதிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். இதை பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக, அரசு பள்ளிகளில் தூய்மை பணி மற்றும் காவல் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை இருப்பினும், அங்கு பள்ளி மாணவர்களை தூய்மை பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஒவ்வொரு நாளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வகுப்பறை, சுற்றுப்புறம் மற்றும் கழிவறைகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக ஏராளமான பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், நாங்கள் பள்ளிக்கு பாடங்களை படிக்க குழந்தைகளை அனுப்புகிறோமா அல்லது வேலை செய்வதற்கு அனுப்புகிறோமா என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, திருமுல்லைவாயல் அரசு நடுநிலைப் பள்ளியில் தூய்மை பணிக்கு போதிய ஆட்களை நியமித்து, அங்கு மாணவர்கள் படிப்பதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் பள்ளிக்கல்வி துறை உயர் அதிகாரிகள் அடிக்கடி நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: