திருச்சுழி பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் குண்டாற்றில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: தீவிர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருச்சுழி: திருச்சுழி பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் குண்டாற்றில் கருவேல மரங்களை அகற்றி சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 38 ஆண்டுகளைவிட சராசரியை விட 41 சதவீதம் அளவிற்கு பருவமழை அதிகமாக பெய்துள்ளது. மழைநீரை சேமிக்க நம்மிடம் இருந்த ஆறுகளும், ஏரி, குளங்களும் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. முன்பு மழைக்காலத்தில் குளங்களை சரியான முறையில் மழைநீர் சேகரிக்கப்பட்டதால் ஆற்றுப் பாசனத்தை சார்ந்திராத பகுதிகளில் கூட விவசாயம் நடந்தது. தமிழ்நாட்டில் இருந்த 39ஆயிரத்து 200 குளங்களில் 10 சதவீதம் ஆக்கிரமிப்பு காரணமாகவும் நகரமயமாதல் காரணமாகவும் அழிந்து போய்விட்டன.

மொத்த கொள்ளளவில் 22 சதவீதம் நீரை சேமித்து வைக்க திறனுள்ள குளங்களில் தற்போது 30 சதவீதம் தூர்ந்து போய் உள்ளதால் 15 சதவீதம் மட்டும் நீரை தேக்கி வைக்க முடிகிறது. வருங்காலத்தில் தமிழ்நாட்டில் பருவமழை காலம் குறையும் என்றும், மழையின் அடர்த்தி 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும். அதாவது ஒன்றரை மாதம் பெய்ய வேண்டிய மழையளவு ஒரு மாதமாக குறைவது மட்டுமின்றி நாள்முழுவதும் பெய்யக்கூடிய மழை அளவு குறையும். இதனை சமாளிக்க நீர் நிலைகள் தயாராக இல்லை. வெள்ளச்சேதம் ஏற்படுவதுடன் மழைநீரை சேமிக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாடு கண்மாய்கள் சங்கிலித்தொடர் அமைப்பு கொண்டிருக்கின்றன. முதல் கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் அமைந்திருக்கும் முதல் கண்மாய் நிரம்பியதும், உபரிநீர் கால்வாய் வழியாக அடுத்த (குளம்) கண்மாய்க்கு பாயும்.இப்படியாக அனைத்து குளங்களும் வரிசையாக நீர் நிரம்பி கடைமடைப் பகுதியில் இருக்கும் விவசாயிகளும் பலன் பெற்றனர். தற்போது குளங்களை இணைக்கும் கால்வாய்களும் ஆக்ரமிக்கப்பட்டிருப்பதால் எதிர்காலத்தில் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை காணப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பருவ கால ஆறுகளில் ஒன்று.

தேனி மாவட்டதில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள, ஆண்டிபட்டி மலையின் மலைச் சிகரங்கலில் ஓடிவரும் ஓடைகளில் இருந்து ஆண்டிபட்டி அருகில் கடல் மட்டத்தில் இருந்து 260 மீ. உயரத்தில் குண்டாறு உருவாகின்றது. இந்த ஆறானது உருவாகும் பகுதி மேல் குண்டாறு எனவும், வங்கக் கடலில் கலக்கும் பகுதி கீழ் குண்டாறு எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த குண்டாறானது மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் சென்று தெற்கு மூக்கையூர் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. இதன் நீளம் 146 கி.மீ ஆகும். இதன் முக்கிய துணை ஆறுகளாக தெற்காறு காணல் ஓடை கிருதுமால் நதி மற்றும் பரலை ஆறுகள் ஆகும்.

குண்டாறானது ஒரு பருவ கால ஆறாகும். கடந்த 1955 ஆண்டுக்கு முன்பு வரையிலும் குண்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பல குளங்களையும், ஊர்களையும் கடுமையாக பாதித்தது. பலமுறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலபோக்கில் குண்டாறு தொடர் பராமரிப்பு இல்லததால் கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லாமல் போனதுதான் வேடிக்கை. இதன் விளைவு கண்மாய்கள் வறண்டு, விவசாயம் பாதிக்கப்பட்டு, நிலங்கள் தரிசாகி, எங்கு பார்த்தாலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து, நிலத்தடி நீரையும் உறிஞ்சி தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 அடியில் தண்ணீர் வந்த நிலை மாறி, குறைந்த பட்சம் 500 அடி ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுக்கும் நிலைக்கு உள்ளது. ஆற்றில் கிடந்த மணல்களை காப்பாற்றி இருந்தால்கூட மழை நீர் சேமித்து, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கும். ஆற்றில் பாறைகள் தெரியும் அளவிற்கு சுரண்டப்பட்டதால், குண்டாறு தேகம் தேய்ந்து ஒல்லியானதுதான் மிச்சம். கிளை நதிகளான தெற்காறு, கிருதுமால் நரி, காணல் ஓடை என அனைத்திலும் மணல் அள்ளப்பட்டு, ஆறுகள் இருந்த அடையாளமே தெரியாமல் உள்ளன. விவசாயம் முற்றிலும் அழிந்து போனது. எங்கு பார்த்தாலும் குடிநீர் பிரச்னை இப்படி ஒவ்வொன்றாக அழிந்து வருவதற்கு முக்கிய காரணமே நீர் நிலைகளை உருவாக்காமல் விட்டது தான்.

ஆங்காங்கே இருந்த ஒரு சில நீர்நிலைகளுக்கு செல்லக்கூடிய வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் கடுமையான வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாய்களுக்கு நீர் வரத்தை உருவாக்க, சென்னம்பட்டி கால்வாய் திட்டம் செக் டேம் கட்டப்பட்டது. முறையான திட்டம் தயாரிக்காததால் டேம் கட்டியும் வீணானது. அதை மாற்றி அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. அதோடு வரத்துக் கால்வாய்களும் போதிய பராமரிப்பு இல்லாததால், ஒவ்வொரு முறையும் தண்ணீர் வரும்போதெல்லாம் உடைப்பு ஏற்பட்டு, மறுபடியும் ஆறு வழியாக வெளியேறி வீணாகிறது. தடுக்க எந்த முயற்சியும் இல்லை என்பது தான் வேதனையான விசயம் என விவசாயிகள் எனக் கூறுகின்றனர்.

தேனி மாவட்டம் முதல் இராமநாதபுரம் மாவட்டம் வரை குண்டாறு சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து அகில இந்திய விவசாய சங்கம் தாலுகா தலைவர் பூமிநாதன் கூறுகையில்: தேனி பகுதியில் உள்ள மலைப்பகுதியில் உருவாகி திருமங்கலம், திருச்சுழி, கமுதி வழியாக குண்டாறு நீர் கடலில் கலக்கிறது. இக்குண்டாற்றை நம்பி பல ஆயிரக்கான விவசாயிகள் நம்பி இருக்கின்றனர். குண்டாற்றை சீரமைக்கபடாமல் கிடப்பில் போடப்பட்டதால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிகள், குளங்கள் வறண்ட நிலையில் உள்ளது.

நீண்ட கால கோரிக்கையான திருச்சுழி பகுதியில் பந்தநேந்தல் அருகே தடுப்பணை கட்டப்பட்டு திருச்சுழி கண்மாயிக்கு தண்ணீர் கொண்டு செல்ல தயார் நிலையில் இருந்தாலும் மழை பொய்த்தால் முற்றிலும் கண்மாயிக்கு நீர்வரத்தின்றி வறண்ட நிலை காணப்படுகின்றன. குண்டாறு மீண்டும் புத்தூயிர் பெற காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் கொண்டு வர வேண்டுமெனவும், 146 கி.மீ பயணிக்கும் குண்டாற்றை சீரமைக்க வேண்டுமென கூறினார்.

Related Stories: