தாம்பரம் ஐஏஎப் சாலையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை

தாம்பரம்: தாம்பரம் ஐஏஎப் சாலையில், விமானப்படை  பயிற்சி மையத்தில் மெடிக்கல் அசிஸ்டன்ட் பணிக்காக ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுவதால், இப்பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஐஏஎப் சாலையில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் மெடிக்கல் அசிஸ்டன்ட் பணிக்காக ஆட்சேர்ப்பு முகாம் நடந்து வருகிறது. 1ம்தேதி (நேற்று) தொடங்கி 9ம்தேதி வரை முகாம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, கேரளா என பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இப்படி வருபவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க 1ம்தேதி (நேற்று), 4ம்தேதி, 7ம் தேதி என 3 நாட்களுக்கு ஐஏஎப் சாலையில் அதிகாலை 2 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 31ம்தேதி இரவு 10 மணி முதல் 9ம்தேதி மதியம் 12 மணி வரை ஐஏஎப் சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையினால் ஐஏஎப் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு வருபவர்கள், அங்குள்ள கல்லூரிக்கு செல்பவர்கள், குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால், விமானப்படை மையத்தின் நுழைவாயிலில் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாகவே இருபுறமும் ஆட்சேர்ப்பு முகாமுக்கு வருபவர்கள் வந்து செல்லும் விதமாக பாதைகள் அமைக்கப்பட்டு இருப்பதோடு, தற்காலிக கழிவறை வசதிகள், காத்திருப்போர் வசதிக்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கடைகள் மற்றும் சிறிய ஓட்டல்களில் வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: