2047ம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

புதுடெல்லி: ‘வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக உருவாக்க மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும்’ என ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை தொடங்கி வைத்து, கூட்டுக் கூட்டத்தில்  உரையாற்றினார். நாடாளுமன்றத்தின் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதியாக முர்மு பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் ஆற்றும் முதல் உரை இது.

சுமார் ஒரு மணி நேரம் பேசிய அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எப்போதுமே தேச நலனையே உச்சமாக கருதுகிறது. எந்த சூழலிலும் அச்சமின்றி, நிலையான, தீர்க்கமான முடிவுகளை எடுத்து வருகிறது. சர்ஜிக்கல் தாக்குதல் முதல் தீவிரவாதத்தை ஒடுக்குவது வரையிலும், எல்லைக் கட்டுப்பாடு கோடு முதல் அசல் கட்டுப்பாடு கோடு வரையிலும் ஒவ்வொரு தவறான செயல்களுக்கும் தகுந்த பதிலடி தந்துள்ளது. காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது முதல் முத்தலாக் தடையை கொண்டு வந்தது வரை பல தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளது. தேவைப்படும் சமயத்தில் கொள்கைகள் மற்றும் உத்திகளை முழுமையாக மாற்றுவதற்கும் தயங்குவதில்லை.

ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரி என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. எனவே கடந்த சில ஆண்டுகளாக ஊழலுக்கு எதிராக இடைவிடாத போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. நேர்மையானவர்கள் அரசு அமைப்புகளில் அமர்த்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்பவர்கள் மீது அனுதாபம் காட்டக் கூடாது என்ற சமூக உணர்வு நாட்டில் அதிகரித்துள்ளது. மெகா மோசடிகள், ஊழல்களில் இருந்து விடுபடுவதற்கான நீண்டகால கோரிக்கை இப்போது நனவாகி உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளாக ஒன்றிய அரசு அனைத்து தரப்பு மக்களுக்காகவும் எந்த பாகுபாடும் இன்றி உழைத்து வருகிறது. அதன் பலனாக, பல அடிப்படைகள் வசதிகள் மக்களை எட்டி உள்ளன. ஏழைகளின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு, அவர்களுக்கு நீடித்த அதிகாரமளிக்க அரசு உழைத்து வருகிறது. தேசத்தின் விரைவான வளர்ச்சி, அதன் தொலைநோக்கு முடிவுகளால் உலகம் இன்று இந்தியாவை அங்கீகரித்துள்ளது. அதனால்தான் 10வது இடத்தில் இருந்து உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த ஆட்சியில் பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்து தடைகளையும் அகற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. சங்கராச்சாரியார் மற்றும் குருநானக் போன்ற துறவிகள் காட்டிய வழியை பின்பற்றி, நாட்டை உயர் தொழில்நுட்ப அறிவின் மையமாக மாற்ற பாடுபடுகிறது. பழங்குடி சமூகங்களின் பெருமைக்காகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் அரசு முன்னோடியில்லாத பல முடிவுகளை எடுத்துள்ளது. பிரதான் மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் 36,000க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே நவீன அவதாரம் எடுத்துள்ளது. நாட்டின் அணுக முடியாத பல பகுதிகளும் இன்று ரயில்வே வரைபடத்தில் சேர்க்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய மின்சார ரயில் நெட்வொர்க்காக இந்திய ரயில்வே வேகமாக முன்னேறி வருகிறது. நமது இளைஞர்கள் புத்தாக்கத்தின் ஆற்றலை இன்று உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றனர். வெளிப்படைத்தன்மையுடன், வரி செலுத்துவோரின் கண்ணியம் ஜிஎஸ்டி மூலம் உறுதி செய்யப்படுகிறது.

வடகிழக்கு மற்றும் நாட்டின் எல்லைப் பகுதிகள் புதிய வேகமான வளர்ச்சி பெற்று வருகின்றன. ஏழைகள், தலித்துகள் கனவு காணவும், ஆசைகளை நிறைவேற்றவும் அரசு தைரியத்தை அளித்துள்ளது. பல நூற்றாண்டுகளாகப் பறிக்கப்பட்ட ஒவ்வொரு சமூகத்தின் விருப்பங்களையும் ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மக்களை காப்பாற்றியுள்ளது. அவர்களின் ரூ.80 ஆயிரம் கோடி மருத்துவ செலவை மிச்சப்படுத்தி உள்ளது.

சராசரியாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 11,000 வீடுகள் ஏழைகளுக்கு கட்டப்படுகின்றன, 55,000 எரிவாயு இணைப்புகள் ஒவ்வொரு நாளும் வழங்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.700 கோடிக்கு மேல் கடன் வழங்கப்படுகிறது. ஆதார் முதல் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வரை போலி பயனாளிகளை அகற்றுவதில் இருந்து மிகப்பெரிய நிரந்தர சீர்திருத்தத்தை செய்துள்ளோம். கடந்த 9 ஆண்டுகளில், இந்திய மக்கள் முதன்முறையாக பல நேர்மறையான மாற்றங்களைக் கண்டுள்ளனர். இன்று ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கையும் உச்சத்தில் உள்ளது.

இந்தியாவைப் பற்றிய தனது பார்வையை உலகமும் மாற்றிக் கொண்டுள்ளது. உலகளாவிய சவால்களுக்கு ஜி20 உறுப்பு நாடுகளுடன் இணைந்து கூட்டுத் தீர்வுகளைக் கண்டறிய இந்தியா தன்னால் முடிந்த முயற்சிகளை செய்கிறது. நாடு தனது 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும், 2047ம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும். கடந்த காலத்தின் பெருமையுடன் நவீனத்துவத்தின் அத்தியாயங்கள் இணைக்கப்பட புதிய தேசத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது. அது, ஏழைகள் இல்லாத, வளமான நடுத்தர வர்க்கத்தை கொண்ட தன்னிறைவு பெற்ற தேசமாக இருக்கும். புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் தங்களின் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஆம் ஆத்மி, பிஆர்எஸ் புறக்கணிப்பு

ஜனாதிபதி உரையை ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சிகள் புறக்கணித்தன. அக்கட்சிகள் கூறுகையில், ‘‘ஜனாதிபதி திரவுபதி முர்முவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், ஒன்றிய பாஜ அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதையும், அனைத்து விஷயத்திலும் தோல்வி அடைந்ததையும் கண்டித்து, ஜனாதிபதி உரையை நாங்கள் புறக்கணிக்கிறோம்’’ என்றனர்.

*கார்கே உள்ளிட்ட காங். தலைவர்கள் ஆப்சென்ட்

காஷ்மீரின் ஸ்ரீநகரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள், எம்பிக்கள் நேற்று முன்தினம் பங்கேற்றனர். இந்நிலையில் அங்கு கடும் பனிப்பொழிவு காரணமாக நேற்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நேற்றைய ஜனாதிபதி உரையில் பங்கேற்க முடியவில்லை. அதே சமயம், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* கூட்டத் தொடரை முன்கூட்டி முடிக்க எம்பிக்கள் கோரிக்கை

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டியில், ‘‘முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 13ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், வரும் 10ம் தேதியே முன்கூட்டி கூட்டத் தொடரை முடிக்க வேண்டுமென, மக்களவை அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் பல்வேறு எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து அரசு பரிசீலிக்கும்’’ என்றார்.

* ஆழமான விஷயங்கள்: மோடி

புதிதாக ஒன்றுமில்லை: கார்கே

ஜனாதிபதி முர்மு உரை குறித்து தலைவர்கள் கருத்து:

பிரதமர் மோடி: ‘பல்வேறு தலைப்புகள் குறித்து விரிவாக பேசிய ஜனாதிபதியின் உரை, பல துறைகளிலும் நிகழும் சீர்த்திருத்த நடவடிக்கைகளை ஆழமாக படம் பிடித்து காட்டியது. சாமானிய மக்கள் எவ்வாறு அதிகாரம் பெற்றனர், அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்பட்டது குறித்து எடுத்துரைத்துள்ளார்’.

மல்லிகார்ஜுன கார்கே, (காங். தலைவர்): ஜனாதிபதி உரையானது, ஜனாதிபதி மூலமாக வாசிக்கப்பட்ட ஒன்றிய அரசின் அறிக்கை. அதில் புதிதாக ஒன்றுமில்லை. அரசு சொல்ல விரும்பிய திட்டங்களையும், சாதனைகளையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார். ஊழலை ஒழித்துவிட்டதாக அரசு கூறுகிறது, ஆனால் ஒரு நபர் எப்படி பொதுத்துறை நிறுவனங்களில், வங்கிகளில் ரூ.1 லட்சம் கோடியை ஏமாற்ற முடியும். பெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்ந்தது. வேலையில்லா திண்டாட்டம் ஏன் அதிகரித்தது. பண மதிப்பு ஏன் சரிந்தது. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் திறப்பாக அரசு கூறுகிறது. அவையெல்லாம் தனியாருக்கு சொந்தமானவை. அதனால் ஏழைகளுக்கு எந்த பலனும் இல்லை.

டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் எம்பி): விலைவாசி கட்டுப்படுத்துதல், மத நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுதல் பற்றி ஒரு வரி கூட இடம் பெறவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் பற்றி வெறும் 2 வரி உள்ளது.

பினோய் விஷ்வம் (இந்திய கம்யூ. எம்பி): பெண்கள், இளைஞர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு அதிகாரம் அளிப்பது வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது.

Related Stories: