×

உணவே விஷமாகலாமா?!

நன்றி குங்குமம் டாக்டர்

தலைப்பை பார்த்தவுடன், உணவில் அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது என்று பெரிய லிஸ்ட் போடப்போகிறேன் என்று பலரும் பயந்திருப்பார்கள். ஆனால், நீங்கள் விரும்பிய எதைச் சாப்பிட்டாலும், அதை சாப்பிடும் முன், அந்த உணவை நீங்கள் கொஞ்சம் பார்க்க வேண்டும். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தப் போகிறேன். அதற்கான கட்டுரை தான் இது!

கேரளாவில் சமீபத்தில் ஓர் இளம் பெண் சிக்கன் ஷவர்மா உணவு சாப்பிட்டு இறந்ததையும்,பலர் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். இன்னும் நாம் பேசிக் கொண்டே இருக்காமல் சாப்பிடும் இடத்திற்கே சென்று விடுவோம். அப்போதுதான் உங்களுக்கு புரியத் தொடங்கும்.

பெரியார் நகர் சமோசாபத்தாண்டுகளுக்கு முன்பு, பெரியார் நகர் அரசாங்க மருத்துவமனையில் பணியாற்றி வந்தேன். அப்போது பணி இடைவேளையில், சமோசாவும் தேநீரும் நண்பர் ஆர்டர் பண்ணியிருந்தார். இதுபோல சமோசாவை எங்குமே சாப்பிட்டிருக்க முடியாது என்று சவால் வேறு விட்டிருந்தார். அதை சாப்பிட்ட உடனேயே, சிகரெட் புகைத்ததுபோல் இருந்தது. என்னடா இது என்று துப்பினால், அதில் ஒரு பீடித் துண்டு.

என்னவென்று கவனித்தபோது, சமோசா மடிப்பவர் காதில் இருந்த ஒட்டு பீடிதான் சமோசாவில் விழுந்து எனக்கு உணவாகி இருப்பது தெரிந்தது. நண்பரிடம் சொன்னேன்- நீங்க சொன்ன மாதிரி இது போல ஒரு சமோசாவை நான் இதுவரை சாப்பிட்டதில்லை என்று!  

கொல்லத்தில் கருவண்டுக்கறி

கேரளாவில், கொல்லத்திற்கு அருகே பணிபுரிந்த போது, வெளியில் சாப்பாடு. தமிழகத்தில் போல் இட்லி, தோசை என்றால் சாம்பார், சட்னி என்று கிடைக்காது. ஆப்பம் - கடலைக்கறி என்ற ஒன்றை சாப்பிட்டோம். முடிக்கும் வேளையில் என்ன கருமிளகு இவ்வளவு பெரியதாக இருக்கிறது என்றேன் நண்பரிடம். ‘அது கருமிளகு இல்லை, கருவண்டு என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அய்யய்யோ என்றேன். நண்பரோ மிகவும் கேஷுவலாக, கருவண்டின் சாறு எல்லாம் உள்ளே போய் இருக்கும். இன்று கடலைக்கறிக்கு பதிலாக கருவண்டுக்கறி சாப்பிட்டுவிட்டோம் பரவாயில்லை வாங்க’ என்றார்.

சென்னை பப்ஸ்

சமோசா தந்த அனுபவத்திலிருந்து, சமோசா மற்றும் பப்ஸ் ஆகிய பண்டங்களை உண்பதை தவிர்த்து விடுவேன். வேறுவழியில்லாமல் சில வேளைகளில் உண்ணும் நிர்பந்தம் ஏற்பட்டால், அதனை அப்படியே சாப்பிடுவது இல்லை. அதனை பிரித்துப் பார்த்துதான் உண்பேன். ஒரு முறை இவ்வாறு பப்ஸை பிரித்தபோது அதற்குள் பல ரப்பர் பேண்டுகள் இருந்தன. நண்பர்களிடம் காட்டினேன். அவர்களும் மலைத்து போனார்கள். (ரப்பர் பேண்டுகள்- இன்று, பார்சல் கட்டுவதற்கு அதிக அளவு பயன்படுத்துகிறார்கள்)

மேல்மருவத்தூர் கண்ணாடித்துண்டு சாப்பாடு

மதுரை போய்விட்டு, சென்னை நோக்கி வருகிறோம். மேல்மருவத்தூர் அருகில் ஒரு சாலையோர உணவகத்தில், மதிய உணவு உண்ணும் போது, சோற்றில் ரசம் ஊற்றுகிறார் கடைக்காரர். சலீரென ஒரு சத்தம் என்னவென்று பார்த்தால், ஒரு உடைந்த கண்ணாடித்துண்டு. ஒரு கணம் கவனிக்காமல் விட்டிருந்தால் விபரீதம் நேர்ந்திருக்கும் இல்லையா? கண்ணாடித்துண்டு குடலைக்கீறி உதிரப்போக்கு, வயிற்றுப்பகுதி சவ்வு அழற்சி ஆகியவை ஏற்பட்டிருக்கும். அது மரணத்திற்கு வழிக்காட்டி இருக்கும்.

கல்யாணத்தில் கரப்பான் ஊத்தப்பம்

சமீபத்தில் ஒரு திருமண வீட்டிற்கு சென்றிருந்தேன். போட்ட ஊத்தாப்பத்தை திருப்பிய போது, அதில் சிறுசிறு கரப்பான் பூச்சிகள் இருந்தன. வெங்காய ஊத்தப்பம் என்று நினைத்த எனக்கு அது கரப்பான் ஊத்தப்பமாக மாறி இருந்தது.

வேலூரில் இரும்பு ஆணி உப்புமா

வேலூரில் ஒரு பிரபல சைவ உணவு விடுதியில் உணவு உட்கொண்டிருந்த போது,15 வயது வயது மதிக்கத்தக்க சிறுவனும் சிற்றுண்டி உண்டு கொண்டு இருந்தான். அவன் வந்த சர்வரிடம் ஓர் இரும்பு ஆணியை காட்டி,‘‘ஏங்க.. நானே சிறுநீரக நோயாளி, கொடுத்த உப்புமாவில் பாருங்கள் எவ்வளவு பெரிய ஆணி’’ என்று சொன்ன போது என் மனம் வருந்தியது. இதைப் பார்த்தால், இரும்பு இதயம் உள்ளவர்கள் கூட இளகிவிடுவார்கள். நல்ல வேளை அவர் கவனித்து விட்டார் என்று தோன்றியது.

கோலா ஆன பினாயில்

 நண்பர் ஒருவர் கோலா பாட்டிலில் பினாயிலை ஊற்றி வைத்திருக்கிறார். தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் பினாயிலை குளிர்பானம் எனக் கருதி அவரது மனைவியும் தாகத்தில் எடுத்துக் குடித்த சம்பவமும் உண்டு. மது போதையில் உள்ளவர்களும் இது போன்ற பிரச்னையில் சிக்குவது உண்டு. எனவே, குடிநீர் என்றாலும், குளிர்பானம் என்றாலும் புது இடங்கள்/பொதுவிடங்களில் எதையும் கேட்காமல் பாட்டிலை மட்டும் பார்த்து முடிவு செய்து, தாகத்திற்காக அவசரப்பட்டு குடித்துவிடக் கூடாது.

இன்னும்...இன்னும்...

 வெளியில், கடைகளில் என்றில்லை. வீட்டில் கூட சிறு சிறு தவறுதல்களினால் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம். சில வீடுகளுக்கு சாப்பிட சென்றபோது, தோசைப்பொடிக்கு பதிலாக, சீயக்காய் பொடியை போட்டது உண்டு. இதுபோலவே சமைத்த உணவில் முடி, கல் இருப்பதெல்லாம் சாதாரணம். நாம் வாங்கி பருகும் தேநீர், காபிகளில், எறும்பு, ஈ எல்லாம் நமது நாட்டில் சர்வசாதாரணம்தான்.

எறும்பு கண்களுக்கு நல்லது என்று கூறுவார்கள். அப்படியென்றால், ஈ எதற்கு நல்லது என்று தெரியவில்லை. நம்மில் பலரும் நீச்சல் குளத்தில் குதித்து குளிக்க நினைப்போம். அது போலவே பல்லியும் பல நேரங்களில் சாம்பாரில் குதித்து குளிக்க நினைக்கிறது. பல்லி விழுந்த உணவை பார்த்தாலே, நமது ஆட்கள் வாந்தி எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். உண்டால் கேட்கவே வேண்டாம்.

அரிசி, பருப்பு போன்ற உணவுகளில் சிறு வண்டுகள் வந்துவிடும். அதை கவனிக்காமல் பலரும் சமைப்பதை பார்த்திருக்கிறேன். இதே போன்று கொண்டைக்கடலையில் ஓட்டை விழுந்தால் அதை சமைக்கக்கூடாது. அதற்குள் புழு, சிறு வண்டு இருக்கலாம். ஓட்டை இருந்த பாதாம் பருப்பை உடைத்து பார்த்தபோது, அதில் சிறு வண்டு உயிருடன் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறேன். அதன் வயிற்றுக்குள் என்ன கிருமிகள் இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? மீன், இறைச்சி உணவுகளை கவனிக்காமல் உண்டால், முள், கூர்மையான எலும்புத் துண்டுகள் தொண்டையை காயப்படுத்தலாம் அல்லது சிக்கி பிரச்னையை ஏற்படுத்தலாம்.

நிதானம்-கவனம்

எனவே, உணவு உண்ணும்போது கவனமாக பார்த்து உண்ண வேண்டும். இல்லையென்றால் பல்வேறு உடல் நலப்பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு உயிருக்கு ஆபத்தும் வரலாம். இதனை வீட்டில் என்றாலும் வெளியில் என்றாலும், உணவு விடுதிகளில் என்றாலும், விருந்துகளின்போது என்றாலும் கண்டிப்பாக செய்ய வேண்டும். நாம் உணவு உண்ணும் போது ஏன் உணவை சரிவரப் பார்ப்பதில்லை? கவனமாக உட்கொள்வதில்லை என்றால், இந்த மின்னல் வேக வாழ்க்கையில் இதற்கெல்லாம் யாருக்கு நேரமிருக்கு என்கிறார்கள்.

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மக்களிடம் பொறுமையும், நிதானமும் இல்லை. இதற்கு உணவு உட்கொள்வதும் ஒரு விதிவிலக்கல்ல. நான் பார்த்தவரை, உணவு உண்ணும் போது மக்கள் ஏதோ யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள் அல்லது நண்பர்கள்-உறவினர்களுடன் பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் உண்கிறார்கள். இல்லை என்றால் ஸ்மார்ட் போனை வைத்து யாரிடமாவது பேசிக் கொண்டு இருக்கிறார்கள் அல்லது யாரிடமாவது சாட்டிங் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

ஏதாவது ஒரு வேளையை செய்துகொண்டே உணவையும் முடித்துவிட வேண்டும் என்பது தான் இவர்களின் சித்தாந்தமாக இருக்கிறது. பயணத்தின் போது என்றால் பரவாயில்லை, வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அப்போதும் கூட கவனமாக இருக்க வேண்டும். எங்கு சென்று உணவு உட்கொண்டாலும், அதைக் கவனித்து பாருங்கள்...

வெளியில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா, வாசனையில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா, சுவையில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று கவனியுங்கள். கெட்டுப் போன உணவுகள், பலரையும் ஒரே நேரத்தில் பாதிக்கும் சம்பவங்களை நீங்கள் செய்திகளின் மூலம் அறிந்திருப்பீர்கள். எனவே, எச்சரிக்கைத் தேவை !               

ஹெல்த்தி நான்வெஜ் ரெசிபி

மீன் லாலிபாப்

தேவையான பொருட்கள்

சூரை மீன் - 6 துண்டுகள்,
சோள மாவு - 1/4 கப்,
மிளகுத் தூள்- 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்,
ரொட்டித் தூள்கள் - 4 தேக்கரண்டி,
உப்பு - சுவைக்கு ஏற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
ஐஸ் கிரீம் குச்சிகள்  -5.  

செய்முறை


மீனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும். கடாயை சூடாக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், சிறிது உப்பு மற்றும் மீன் சேர்க்கவும். கொதிக்க விடவும். அது வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கவும். அதை குளிர்விக்க வேண்டும், பின்னர் எலும்புகளை அகற்றி, சதையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த மீன், மஞ்சள் தூள், மிளகுத் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கைகளால் பிசையவும். இப்போது ஐஸ்கிரீம் குச்சியில் பந்துகள் போல் பிடித்து வைக்க வேண்டும். இப்போது சோள மாவை தண்ணீரில் கலந்து பேஸ்டாக சேர்த்து ஒரு பைண்டிங் செய்யுங்கள். இப்போது ஐஸ்கிரீம் குச்சியை சோள மாவு பேஸ்டில் தோய்த்து, பிரட் தூளில் உருட்டவும். ஒரு கடாயை சூடாக்கி, அது சூடானதும் எண்ணெய் சேர்க்கவும், லாலிபாப்பை இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுத்தால் மீன் லாலிபாப் தயார்.

மீன் லாலி பாப்பின் ஊட்டச்சத்து நன்மைகள்

*டுனாவில் புரதம் அதிகம் உள்ளது. டுனாவில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், பி-வைட்டமின்கள், செலினியம் மற்றும் கோலின் உள்ளது. டுனாவில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த மீன்கள் மூளைக்கு உணவளிக்கும் . இந்த மீன்களின் இயற்கை எண்ணெய்களில் மூளை ஆரோக்கியத்திற்கு அவசியமான DHA போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. டுனாவை சாப்பிடுவது, மூளை செல் வளர்ச்சியை தூண்டுவதாக
நிரூபிக்கப்பட்டுள்ளது.

*நியாசின் ஒரு முக்கிய அங்கமாகும், இது மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் வயதானதை தாமதப்படுத்துகிறது. நியாசின் அல்சைமர் நோய் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தைக் குறைக்கும். டுனாவில் ஃபோலேட், இரும்புச் சத்து மற்றும் பி12 உள்ளது. இது ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது.

கட்டுரை, படங்கள்: டயட்டீஷியன் கோவர்தினி

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்