புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை: சைபர் கிரைமில் நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்

சென்னை: தனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட பாஜ நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் க்ரைமில் நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தமிழக பாஜவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் கடந்த நவம்பர் 22ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைத்தளம் பதிவு, ஆபாச ஆடியோ பேச்சு விவகாரம், அண்ணாமலைக்கு எதிரான பேச்சு மற்றும் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தன்னை சிலர் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக சைபர் க்ரைமில் ஆன்லைன் மூலமாக நடிகை காயத்ரி ரகுராம் புகார் அளித்துள்ளார். அதில் சமூக வலைதளத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்து பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பாஜ நிர்வாகி ஒருவர் தனது டிவிட்டரில் காயத்ரி ரகுராம் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டு ஆபாசமாக திட்டியதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: