பெண் போலீசை தாக்கிய அதிமுக வக்கீல் மீது வழக்கு

சிவகாசி: சிவகாசியில் பணியில் இருந்த பெண் போலீசை தாக்கிய அதிமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி மருதுபாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்து மணிகண்டன். வழக்கறிஞரான இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக ெஜ. பேரவை துணைச் செயலாளராக உள்ளார். இவர் சிவகாசி - திருத்தங்கல் ரோட்டில் நேற்று டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்தவர் எதிர்பாராதவிதமாக இவரது டூவீலர் மீது மோதியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த முத்து மணிகண்டன் சைக்கிளில் வந்தவரை தாக்கி  சண்டை போட்டுள்ளார். அப்போது சிவகாசி முருகன் கோயில் அருகே பணியில் இருந்த டிராபிக் போலீஸ் ராஜம்மாள் (48) சண்டையை விலக்கி விட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முத்து மணிகண்டன் ராஜம்மாளின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகின்றது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசில் டிராபிக் போலீஸ் ராஜம்மாள் புகார் அளித்தார். போலீசார் முத்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: