ஜி20 கல்வி பணிக்குழு 2023 முதல் கூட்டம் சென்னையில் பிப். 1, 2ல் நடக்கிறது

சென்னை: ஜி20 கல்வி பணிக்குழு  2023ன் முதல் கூட்டம் சென்னையில் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக பி.ஐ.பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

2023 ஜி 20 உச்சிமாநாட்டின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள  நிலையில், தரமான கல்வி மற்றும் திறன்வளர்ச்சியில் உள்ள இடைவெளிகளைக்  குறைக்க ஜி 20 நாடுகளுடன் இணைந்து செயல்படுவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது.  2023 ஜி 20 உச்சிமாநாட்டின் கருப்பொருளான ‘ஒரே பூமி ஒரே குடும்பம், ஒரே  எதிர்காலம்’, என்பது உலகம் ஒரு குடும்பம் என்ற இந்தியாவின் பண்டைய  நம்பிக்கையை  எதிரொலிக்கிறது.

புவிக்கோள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களுக்குத் தீர்வு காண, கல்வி உள்ளிட்டவற்றில் நாம் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதன் ஒரு பகுதியாக  தமிழ்  நாட்டில் ஜி 20 கல்விப் பணிக்குழுவின் இரண்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.  அவற்றில் ஒன்று சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் 2023, ஜனவரி 31 அன்று  நடைபெறவுள்ள “கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு” என்பது பற்றிய கருத்தரங்காகும்.

மற்றொன்று சென்னையில் 2023, பிப்ரவரி 1, 2 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி 20 கல்விப் பணிக்குழுவின் முதலாவது கூட்டமாகும். இதைத்  தொடர்ந்து இரண்டாவது கூட்டம் 2023, மார்ச் 16,17 தேதிகளில்  பஞ்சாபின்  அமிர்தசரசிலும், மூன்றாவது கூட்டம் 2023, ஏப்ரல்  25,27 தேதிகளில்  ஒடிஸாவின் புவனேஸ்வரிலும், நான்காவது கூட்டம் 2023, ஜூன் 20-21 தேதிகளில்  மகாராஷ்டிராவின் புனேயிலும் நடைபெறவுள்ளன. இதையடுத்து புனே நகரிலேயே ஜூன்   22 அன்று  ஜி 20 நாடுகளின்  கல்வி அமைச்சர்கள் சந்திப்பு நடைபெறும்.

இந்த ஜி20 கல்வி பணிக்குழு கூட்டத்தில் முக்கியமாக 4 முன்னுரிமை விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

அதன்படி

1. அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும்  குறிப்பாக கலவையான கற்றல் சூழலை உறுதி செய்தல்

2. ஒவ்வொரு நிலையிலும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றலை மேலும் உள்ளடக்கிய, தரமான மற்றும் கூட்டுமுயற்சியாக்குதல்

3. திறன்களை உருவாக்குதல், வேலையின் எதிர்காலச் சூழலில் வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவித்தல்

4. ஆராய்ச்சியை வலுப்படுத்துதல், வளமான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் புதிய கண்டுபிடிப்புகளை  ஊக்குவித்தல்.

இவ்வாறு அதில் குறிப்பிடபட்டுள்ளது.

Related Stories: