டான்செட் தேர்வுக்கான தேர்வு கட்டணம் அறிவிப்பு

சென்னை: முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் மற்றும் சி.இ.இ.டி.ஏ., நுழைவு தேர்வுக்கான தேர்வு கட்டணத்தை அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் மற்றும் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும், அதே போல் என்ஜினியரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் ‘டான்செட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளே மேற்சொன்ன படிப்புகளில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் டான்செட் தேர்வு வருகிற மார்ச் மாதம் 25ம் தேதியும், சி.இ.இ.டி.ஏ நுழைவுத் தேர்வு மார்ச் மாதம் 26ம் தேதி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது நுழைவு தேர்வுக்கான கட்டணத்தை அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், டான்செட் எம்.சி.ஏ மற்றும் எம்.பி.ஏ படிப்பிற்கு எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ.500ம், இதர பிரிவு மாணவர்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் சி.இ.இ.டி.ஏ படிப்பிற்கு எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ.750 மற்றும் கவுன்சிலிங்க் கட்டணமாக கூடுதலாக ரூ.250ம், இதர பிரிவு மாணவர்கள் ரூ.1,500ம் கூடுதலாக ரூ.500ம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு, சந்தேகங்களுக்கு tanceeta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

Related Stories: