லக்னோவில் இன்று 2வது டி.20 போட்டி; நியூசிலாந்துக்கு பதிலடி தருமா இந்தியா?: தோற்றால் நம்பர் 1 இடம் `காலி’

லக்னோ: இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் 2வது டி.20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு படுமோசமாக இருந்தது.  குறிப்பாக அர்ஷ்தீப்சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை அள்ளிக்கொடுத்தார். மேலும் நோபாலும் அவருக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.

ஒவ்வொரு போட்டியிலும் அவர் நோபாலை வீசி வருகிறார். அவர் நீண்டதூரம் ஓடி வந்து பந்துவீசுவதுதான் நோபாலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக முன்னாள் வீரர்கள் முகமது கைப், சஞ்சய் பாங்கர் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். உம்ரான் மாலிக்கும் ரன்களை வாரிக்கொடுத்து வருகிறார்.

பேட்டிங்கிலும் இஷான்கிஷன் அவுட்ஆப் பார்மில் உள்ளார். கடந்த 12 டி.20 போட்டிகளில் அவர் ஒரு அரைசதம் கூடஅடிக்கவில்லை. இன்று இந்திய அணி தோல்விஅடைந்தால் தொடரை இழக்கும். மேலும் நம்பர் ஒன் டி.20 அணி என்ற அந்தஸ்தையும் இழக்கவேண்டி இருக்கும். இதனால் கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்தியா களம் இறங்குகிறது. பவுலிங்கில் ஒரு சில மாற்றம் இருக்கும் என தெரிகிறது. இந்தியா தொடர்ச்சியாக 10 டி.20 தொடர்களை வென்றுள்ளது. 2021ம் ஆண்டுக்கு பின் டி.20 தொடரை இழந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் நியூசிலாந்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ராஞ்சியில் பின் ஆலென், கான்வே, டேரில் மிட்செல் அதிரடியில் மிரட்டினர். கேப்டன் மிட்செல் சான்ட்னர், சுழலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமாரையே ரன் அடிக்க விடாமல் திணறடித்தார். மைக்கேல் பிரேஸ்வெல், லோக்கி பெர்குசன், ஜேக்கப் டப்பி, சோதி ஆகியோர் பந்துவீச்சில் வலு சேர்க்கின்றனர்.  இரு அணிகளும் இன்று 24வது முறையாக டி.20 போட்டியில் மோத உள்ளன. இதற்கு முன் ஆடி உள்ள  23  போட்டிகளில், இந்தியா 12, நியூசிலாந்து 10  போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

Related Stories: