பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், பம்மல், திருநீர்மலை பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள், தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. கால்நடைகளை வளர்ப்போர் முறையாக கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும்.

ஆனால், இப்படி தாறுமாறாக அவிழ்த்து விட்டு, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக ரூபாய் 2000 முதல் 10000 வரை அபராதம் விதித்து வருகிறது. அதன் விளைவாக, தற்போது சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவது முற்றிலும் குறைந்த நிலையில், அவைகளால் ஏற்படும் விபத்துகளும் கணிசமாக குறைந்துள்ளன. ஆனால், தற்போது வரை சென்னை புறநகர் பகுதிகளில் சாலைகளில் மாடுகள் தாறுமாறாக சுற்றித் திரிவதை காண முடிகிறது.

அவைகள் அந்தப் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் சேகரமாகும் குப்பையை மேய்ந்து வருவதால், குப்பை சாலையெங்கும் சிதறி, கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் நோய்கள் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மாடுகள் இரவு நேரத்திலும்கூட வளர்ப்பவரின் வீடுகளுக்கு செல்லாமல், பிரதான சாலையிலேயே படுத்துக்கிடக்கின்றன. இது தெரியாமல், இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி மாடுகள் மீது மோதி, சிறு சிறு விபத்துகளில் சிக்குகின்றனர்.

கடந்த ஆண்டு இதேபோன்று பம்மல் பகுதியில் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த குதிரை ஒன்று, அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை எட்டி உதைத்ததில், அவன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சென்னை புறநகர் பகுதிகளிலான பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை சம்பந்தப்பட்ட தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதித்து, பெருகி வரும் விபத்துகளில் இருந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: