பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்காமல் தொழிற்சங்கங்களை அவமதிக்கும் பாஜ அரசு: எஸ்ஆர்எம்யூ தலைவர் குற்றச்சாட்டு

பெரம்பூர்: பெரம்பூரில் உள்ள எஸ்ஆர்எம்யூ அலுவலகத்தில், சென்னை கோட்ட நிர்வாகிகள் கூட்டம், அதன் தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், துணை பொதுச்செயலாளர் பால் மேக்ஸ் வெல் ஜான்சன், துணை செயலாளர் ஈஸ்வர் லால் உள்ளிட்ட சென்னை கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், எஸ்ஆர்எம்யூ தலைவர் ராஜா ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள ஆபத்துகள் குறித்து, சென்னை கோட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. ஒன்றிய அரசு ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

எங்களால் முடிந்தவரை அந்த முயற்ச்சிகளை தகர்த்துள்ளோம். ரயில்வே துறையில் 3 லட்சத்து 12 ஆயிரம் காலியிடங்கள் உள்ளது. தென்னகத்தில் 2,2000 காலியிடங்கள் உள்ளன. பொதுமக்களின் பாதிகாப்பை உறுதி செய்யும் காலி பணி இடங்களை கூட நிரப்பாமல் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டி வருகிறது. ஒன்றிய பட்ஜெட்டிற்கு முன்பாக, பல்வேறு தரப்பு பிரிவினர், மத்திய தொழிற்சங்கங்களை அழைத்து பேசுவது வழக்கம். அந்த மாண்பு கடந்த அரசாங்கங்களுக்கு இருந்தது.

ஆனால், இந்த முறை காணொலி மூலம் அழைக்கப்பட்டு, 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். பின்னர், தொழிலாளர்களின் கோரிக்கையை கடிதமாக அளித்துள்ளோம். இதனை ஆளும் ஒன்றிய அரசு செவிசாய்காது என்பது தெரியும். இருப்பினும் வரும் 30ம்தேதி டெல்லியில் நடைபெறும் அனைத்து தொழிற்சங்க தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு அடுத்த கட்ட போராட்டம் குறித்த முக்கிய முடிவுகள் அறிவிக்கபடும்,’’ என்றார்.

Related Stories: