சேலம் ஓமலூர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் முறையாக விசாரிக்கப்படவில்லை: தண்டனை பெற்றவர்கள் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் வாதம்

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நேற்று வந்தது. அப்போது மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ் வாதிடும்போது, ஆதாரங்களை காவல்துறை உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களையும், அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பதிவான வீடியோவின் ஹார்ட் டிஸ்கையும் நடைமுறைகளை பின்பற்றாமல் காவல்துறை கையாண்டுள்ளது.

ஹார்ட் டிஸ்க்கில் இருந்த பதிவுகளை யார் கையாண்டது, யார் எடுக்க சொன்னது, யார் எடிட் செய்தது, யார் அழித்தது தொடர்பான விவரங்களை காவல்துறை முழுமையாக விசாரிக்கவில்லை. சிசிடிவி கண்காணிப்பாளரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. சாட்சிகள் சட்டத்தின்படி உரிய சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதை கருத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அடுத்தகட்ட வாதத்திற்காக விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு  தள்ளிவைத்தனர்.

Related Stories: