பங்குச்சந்தையில் தில்லுமுல்லு அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி: அமெரிக்க நிறுவனம் ஆதாரத்துடன் அறிக்கை; செபி, ஆர்பிஐ விசாரிக்க காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: அதானி குழுமம் பங்குச்சந்தையில் பல்வேறு மோசடிகளை செய்து, ரூ.17.80 லட்சம் கோடி வரை முறைகேடாக லாபம் சம்பாதித்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஆதாரங்களுடன் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செபி, ரிசர்வ் வங்கி உரிய விசாரணை நடத்த வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம், பங்குச்சந்தையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் தில்லுமுல்லுவை அம்பலப்படுத்தி வருகிறது. தற்போது அந்த நிறுவனம் கடந்த 24ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், உலகின் 4வது பெரும் பணக்காரரும் ஆசியாவின் நம்பர்-1 பணக்காரருமான அதானியின் அதானி குழும நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலாக்கியது. அந்த அறிக்கையில், கடந்த 2 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில், அதானி குழுமம் பங்குச்சந்தையில் பல்வேறு முறைகேடுகளை செய்து ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது.  ‘அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி). இதில், 100 பில்லியன் டாலர் (ரூ.8.2 லட்சம் கோடி) கடந்த 3 ஆண்டில் ஈட்டப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 7 நிறுவனங்களின் பங்குகள் 819 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், பங்குச்சந்தையில் மோசடி செய்து, போலி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக ஈட்டியுள்ளது. இதற்காக மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட், கரீபியன் தீவுகள் போன்ற தாராள வரிச்சலுகை உள்ள நாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கியுள்ளது. இவற்றை அதானி குழுமத்தில் உயர் பதவிகளில் உள்ள அதானியின் உறவினர்கள் நிர்வகித்து வருகின்றனர். மொரீஷியசில் மட்டுமே 38 போலி நிறுவனங்களை அதானி குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.

மேலும், அதானி குழுமம் வரம்புக்கு மீறி கடன் பெற்றுள்ளது. இதனால் நிலையற்றதன்மையில் அதானி குழும நிறுவனங்கள் உள்ளன’ என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதானி குழுமத்தின் போலி நிறுவனங்கள் குறித்த புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. அதோடு, அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக 88 கேள்விகளையும் ஹிண்டன்பர்க் எழுப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர உள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது: அதானி குழுமத்திற்கும், ஒன்றிய ஆளும் அரசுக்கும் இடையேயான நெருக்கமான உறவை நாங்கள் முழுவதும் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், பொறுப்பான எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த விவகாரத்தில், பொதுநலன் கருதி இந்திய பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை உரிய விசாரணை நடத்த வேண்டும். கருப்புப் பண ஒழிப்பு பற்றி பேசும் ஒன்றிய பாஜ அரசு தனக்கு நெருக்கமான நிறுவனத்தின் இந்த சட்டவிரோதச் செயல்களைப் பார்த்து கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறதா? இந்த குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி விசாரிக்குமா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74,000 கோடி பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை அரசின் எஸ்பிஐ வங்கி வழங்கி உள்ளது. எனவே, அதானி குழுமம் முறைகேடு செய்து தனது பங்கு மதிப்பை தன்னிச்சையாக உயர்த்தி, அவற்றை அடமானமாக வைத்து, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றதா என்பது குறித்து ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும். இது உண்மையாக இருந்தால் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் நிதிநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

பொதுவாக இதுபோன்ற தனியார் ஆய்வு குறித்து அரசியல் கட்சிகள் விசாரணையை கோருவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே அவருக்கு தொழிலதிபர் அதானி மிகுந்த நெருக்கமானவராக இருந்து வருவதால் இந்த விவகாரத்தில் விசாரணையை நாங்கள் கேட்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதற்கிடையே, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு காரணமாக, அதானி குழுமத்தின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் சரிவதோடு, பிற நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பங்குச்சந்தையே ஆட்டம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* தேசியக் கொடியுடன் சிஎப்ஓ பேட்டி

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை மறுத்து அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) ஜுகேசிந்தர் சிங் பேட்டி அளித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவர் பின்னால் தேசியக் கொடி இடம் பெற்றுள்ளது. இதனை சமூக ஊடகங்களில் பலர் கடுமையாக எதிர்த்துள்ளனர். ‘அவர் என்ன அமைச்சரா அல்லது அரசாங்க பிரதிநிதியா? மோசடி குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் போது எதற்காக தேசியக் கொடியை பயன்படுத்துகிறார்? இந்த மாதிரி தேசியக் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த சட்டம் அனுமதிக்கிறதா?’ என பலவாறாக மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

* 2வது நாளில் ரூ.4.17 லட்சம் கோடி காலி

ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் 2வது நாளாக நேற்றும் கடும் சரிவைக் கண்டன. கடந்த 2 நாளில் அதிகபட்சமாக அதானி டோட்டல் காஸ் நிறுவனம் 20 சதவீத சரிவை கண்டது. இந்த ஒரு நிறுவனத்தின் நஷ்டம் மட்டுமே ரூ.1.04 லட்சம் கோடி. மொத்தமாக 2 நாளில் அதானி குழுமத்திற்கு ரூ.4.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல, இந்த விவகாரத்தால் இந்திய பங்குச்சந்தையும் நேற்று ஆட்டம் கண்டது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 800 புள்ளிகள் சரிந்தது. சென்செஸ் 874 புள்ளிகள் சரிந்தன. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.10.73 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

* வழக்கை சந்திக்க தயார்

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என அதானி குழுமம் மறுத்துள்ளது. மேலும், தங்களது நிறுவன வளர்ச்சியை கெடுக்கும் விதமாக ஹிண்டன்பர்க் நிறுவனம் போலியாக  அறிக்கை வெளியிட்டு, வீழ்ச்சியில்  பலனடைய பார்ப்பதாக குற்றம்சாட்டியது. மேலும், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அதானி குழுமம் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு பதிலடியாக, ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில், ‘நாங்கள் எங்கள் நிலையில் இருந்து பின் வாங்க மாட்டோம். முதலில் வெளியிட்ட எங்கள் அறிக்கையில் அதானி குழுமத்திடம் 88  கேள்விகளை கேட்டிருந்தோம். ஆனால் 36 மணி நேரம் ஆன பிறகு அதில் ஒன்றிற்கு கூட இதுவரையில் பதிலளிக்கவில்லை. எங்கள் மீது வழக்கு தொடரப் போவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதை வரவேற்கிறோம். வழக்கை சந்திக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளது.

Related Stories: