ஏற்காடு, தர்மபுரியில் பயங்கர வெடிச்சத்தம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் ஓட்டம்

தர்மபுரி: சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் தர்மபுரியில் நேற்று காலை திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று காலை 11.15 மணிக்கு திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. அப்போது, நிலம் அதிர்ந்து, வீடுகள் குலுங்கின. சில விநாடிகளில் அந்த அதிர்வு நின்றது. நிலநடுக்கம் ஏற்பட்டது போல் இருந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். ஏற்காட்டிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் இதனை உணர்ந்தனர். ஹோட்டல், ரிசாட்டுகளில் தங்கியிருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். அதேபோல், ஒண்டிக்கடை, கொட்டச்சேடு உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் இந்த அதிர்வை மக்கள் உணர்ந்தனர். தெருக்களிலும், முக்கிய சாலையிலும் திரண்டனர். ஆனால், இந்த அதிர்வால் வீடுகள், ரிசார்ட்டுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதேபோல் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், நேற்று மதியம் 11.30 மணியளவில் பயங்கர வெடிச்சத்தத்துடன் அதிர்வுகள் உணரப்பட்டது. வெடிச்சத்தம் கேட்ட நிலையில் வீடுகளில் ஜன்னல், கதவு மற்றும் சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் நகர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருவோர், தெருவுக்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது, வானில் ஜெட் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அதனால், சத்தம் எழுந்தது தெரியவந்தது. தர்மபுரி நகரம் மற்றும் வெண்ணாம்பட்டி, அதகப்பாடி, இண்டூர், பென்னாகரம், தொப்பூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சத்தம் எழுந்தது.

சேலம் மாவட்ட வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கூறுகையில், ‘கர்நாடகாவிலிருந்து அடிக்கடி தர்மபுரி மாவட்ட வான் பகுதியில் ஜெட் விமானங்கள் சோதனை ஓட்டம் நடப்பது வழக்கம். ஜெட் விமானத்தில் இருந்து காற்று வெளியேற்றும் சமயத்தில், மலைப்பகுதியில் எதிரொலித்து பயங்கர வெடிச்சத்தம் எழுவது வாடிக்கை. இது ேபான்ற நிகழ்வு ஏதும் நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது,’’ என்றனர்.

Related Stories: