இரட்டை இலை சின்னம் 100% எங்களுக்கு தான்; பாஜகவின் ஆதரவு எங்களுக்கு தான்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: பாஜகவின் ஆதரவு எங்களுக்கு தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோரது தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக பணிகள் நடந்து வருகின்றன. மின்னல் வேகத்தில் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், எதிரணியில் வேட்பாளரை நிறுத்த முடியாமல் திணறி வருகின்றன. அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவது யார் என்பது குறித்து முடிவு செய்ய ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இன்றைய ஆலோசனைக்குப் பின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் பிப்.3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நினைவிடத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தும் நிகழச்சிக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தல் அதிமுக வேட்பாளர் பெயர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். இடைத்தேர்தல் வேட்பாளர் தொடர்பாக கட்சியினரிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும். கூட்டணி தர்மத்தின் படி எல்லோரையும் சந்தித்தோம்; விரைவில் அவர்கள் முடிவை அறிவிப்பார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களை ஆதரிப்பாளர்கள்.

அதிமுக வேட்பாளர் விண்ணப்பப்படிவம் A,Bயில் இடைக்கால பொதுச்செயலாளர் கையெழுத்திடுவார். ஈரோடு கிழக்கு தேர்தல் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் இடையேயான போட்டி. பணநாயகம் வென்றதாக சரித்திரம் இல்லை, எனவே ஜனநாயகம் தான் வெல்லும். கட்சியைப் பொறுத்தவரை இபிஎஸ் என்ற ஒற்றைத் தலைமையில் தான் உள்ளது. பாஜகவின் ஆதரவு எங்களுக்கு தான். இரட்டை இலை சின்னம் 100% எங்களுக்கு தான். ஈரோட்டில் வாக்காளர்கள் முழு மனதோடு எங்களை ஆதரிப்பார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் மக்கள் ஆதரவோடு அதிமுக மகத்தான வெற்றியை பெறும் இவ்வாறு கூறினார்.

Related Stories: