கவர்னர் உரையை செல்போனில் படம் பிடித்த விவகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவை உரிமை குழு விசாரணை ெதாடங்கியது

சென்னை: கவர்னரின் விருந்தினர்களில் ஒருவர், பேரவை நிகழ்வுகளை செல்போனில் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக அவை உரிமை குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, நேரில் பார்த்த அலுவலர்கள், அவைக் காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த 9ம்தேதி கவர்னர் உரையோடு தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.  

அப்போது, தமிழக அரசு ஒப்புதல் அளித்த வாக்கியத்தை மாற்றி, தனது சொந்த  வாக்கியங்களை பதிவு செய்திருந்தார். இதற்கு கவர்னர் முன்னிலையிலேயே  முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து, சட்டப் பேரவை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இந்நிலையில், கவர்னர் உரை நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, விருத்தினர் மாடத்தில் இருந்த கவர்னரின் விருந்தினர் ஒருவர் அவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்தார் என்றும், இதில் அவை உரிமை மீறல் உள்ளதால், இதை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பிராஜா பேரவை கூட்டத் தொடரில் வலியுறுத்தினார்.  

இதற்கு, இந்த பிரச்னையில் அவை உரிமை மீறல் இருப்பதாக கருதி இதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அவை உரிமை குழுவிற்கு உத்தரவிடப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இந்நிலையில் அவை உரிமைக்குழு கூட்டம் துணை சபாநாயர் பிச்சாண்டி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைப்பெற்றது.   இந்த, கூட்டத்தில் அன்று பணியில் இருந்த அவை காவலர்கள், நேரில் பார்த்த அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்றது. அவை உரிமை குழு தலைவராக, துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளார். இந்த குழுவில்  16 உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், பொள்ளாச்சி ஜெயராமன், இனிகோ இருதயராஜ், ஈஸ்வரப்பன், இ.கருணாநிதி, நல்லதம்பி, பிரின்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: