பெண்களை தாக்கும் வழுக்கைக்கு குட்பை!

நன்றி குங்குமம் தோழி

பளபள சருமம், அடர்த்தியான மினுமினுக்கும் கூந்தல், ஜொலிக்கும் நகங்கள்... இவை மூன்றுமே பெண்களின் மிகப்பெரிய சொத்துக்கள் என்று சொல்லலாம். ஆனால் தற்போதுள்ள சுற்றுப்புறச்சூழல், உணவு மாற்றம், வேலை பளு, அதிக அளவு ரசாயன பயன்பாடு போன்ற பல காரணங்களால் பெண்கள் இந்த மூன்றிலும் பலவிதமான பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைமுடி பிரச்னை தான் இன்றைய தலைமுறையினரின் முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது. வீடு முழுக்க முடி கொட்டிக் கிடக்கிறது.

சீவினால் தலையில் இருந்து கொத்துக்கொத்தாக முடி வருகிறது... இந்த புலம்பல்களை கடந்து பெண்கள் சந்தித்து வரும் பிரச்னை வழுக்கை. ஆண்களின் முக்கிய பிரச்னையாக இருந்து வந்த வழுக்கை இப்போது பெண்களையும் தாக்க ஆரம்பித்துவிட்டது. இது ஏற்பட காரணம் மற்றும் அதற்கான தீர்வு குறித்து ஆலோசிக்கிறார் சருமம் மற்றும் அழகியல் மருத்துவர் ஸ்வேதா ராகுல்.

‘‘சருமம், தலைமுடி மற்றும் நகம் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்’’ என்று பேசத் துவங்கியவர் பெண்களின் வழுக்கை பிரச்னை குறித்து விவரித்தார். ‘‘நடிகர் வில்ஸ்மித் அவர்களின் மனைவிக்கு ஏற்பட்டு இருக்கும் அலோபேசியா அரியாடா என்பது எதிர்ப்பு சக்தி குறைவினால் ஏற்படும் வழுக்கை.

ஆனால் தற்போது உள்ள டீன் ஏஜ் பெண்களில் பலர் அலோபேசியா என்ற முடி உதிர்தல் பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். இவர்களின் பெரும்பாலான பிரச்னை முடி உதிர்தலாக இருந்தாலும், நாளடைவில் அவர்களின் முடியின் அடர்த்தி குறைந்து... மண்டையின் உள்பகுதி வெளியே தெரிய ஆரம்பிக்கும். இந்த முடி உதிர்தல் பிரச்னையை இரண்டு விதமாக குறிப்பிடலாம். ஆண்ட்ரோஜெனிடிக் அலோபேசியா. அதாவது பேட்டர்ன் ஹேர்லாஸ். ஆண்கள் என்றால் அவர்களின் முன் மண்டையில் ‘வி’ வடிவத்தில் முடிகள் உதிர்ந்து அந்தப் பகுதியில் வழுக்கை ஏற்படும். அதனைத் தொடர்ந்து பின் மண்டையிலும் முடிகள் உதிர்ந்து மண்டையின் நடுப்பகுதியில் வழுக்கை ஏற்படும்.

இதே பிரச்னை பெண்களை தாக்கும் போது அவர்கள் வகடு எடுக்கும் இடத்தில் தான் முதலில் ஆரம்பிக்கும். அந்த இடம் அப்படியே அகண்டு வகடு பாதை நாளடைவில் பெரிதாகும். அடுத்த டிஃப்யூஸ்ட் பால்டிங். அதாவது முடிகள் கொட்டுவதால், உங்களின் அடர்த்தி குறைந்து முடிகள் மெல்லியதாக காட்சியளிக்கும். முடி கொட்ட முக்கிய காரணம் டெஸ்டோஸ்ட்ரோன் (testosterone) ஹார்மோன். இது ஆண்களின் உடலில் இருக்கக்கூடிய முக்கிய ஹார்மோன். இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் இருக்கும். இது முடி கொட்டுதல் பிரச்னையை மரபியலாக ஏற்படுத்தும். அதாவது இது முடி கால்களில் தங்கிவிடுவதால், அது முடியின் வேர் பகுதியினை பாதித்து முடிகள் உதிர ஆரம்பிக்கும்.

ஆண்களுக்கு இது இரண்டே வாரத்தில் அதிக அளவு முடி இழப்பை ஏற்படுத்தும். அதுவே பெண்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு மாசமாகும். அதன் பிறகு தான் அவர்கள் முடி உதிர்கிறது என்பதை உணர்வார்கள். ஹார்மோன் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் பாலிசிஸ்டிக் ஓவரிஸ், ஹைப்போ தைராய்ட், நீரிழிவு, மெட்டபாலிக் சிண்ட்ரோம், உடல் பருமன், டைபாய்ட் போன்ற வைரல் ஜுரப் பாதிப்பு, ஹைபர் டென்ஷன், மரபியல் காரணமாகவும் இந்த பிரச்னை பெண்களை பாதிக்கும்.

பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு மற்றும் மெனோபாஸ் நேரத்தில் தான் அதிக அளவு முடி உதிர்தல் இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் 17 வயது நிரம்பிய பெண்களும் இந்த பிரச்னையினை சந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். உடல் ரீதியான பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும், நாம் சாப்பிடும் உணவும் இந்த பாதிப்பினை ஏற்படுத்த காரணமாக அமைகிறது. அதிக அளவு கொழுப்பு, துரித உணவுகளாலும் உடலில் இன்சுலின் அளவினை அதிகரிக்கும். இவை டெஸ்டோஸ்ட்ரோனுடன் இணையும் போது முடி கொட்டுவது மேலும் அதிகரிக்கும்.

பெண்கள் பூப்படைந்த காலம் முதல் குழந்தை பேறு, பிரசவம், மெனோபாஸ் என எல்லாக் காலக்கட்டங்களிலும் பெண்கள் உடல் ரீதியாக பலவிதமான ஹார்மோன் மாற்றத்தினை சந்தித்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க சமுதாயத்தில் ஏற்படும் உலகளாவிய தொற்று காரணமாக (கொரோனா) வைரஸ்கள் முடிக்கால்களுக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் பாதிப்பினை ஏற்படுத்தும். விளைவு முடி உதிர்தல். ஏற்கனவே முடி உதிர்தல் பிரச்னை இருப்பதால், இது போன்ற தொற்றினால் ஏற்படும் பாதிப்பால், மேலும் முடி உதிர்ந்து ஒரு கட்டத்தில் வழுக்கை ஏற்பட்டு அது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பிக்கும். இவை எல்லாவற்றையும் தவிர பெண்களின் பொதுவான பிரச்னை அனிமீயா.

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைபாடு. இதனாலும் முடி உதிரும். காரணம் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். அதை ஈடுசெய்ய பேரீச்சை, அயன் சப்ளிமென்ட் போன்றவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதை பின்பற்றுவதில்லை. மற்றொரு காரணம் டயட்டிங். பிடித்த டயட்டினை எந்தவித ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்வது. குறிப்பாக கார்போஹைட்ரேட்டினை முற்றிலும் தவிர்த்துவிடுவதாலும் பிரச்னை ஏற்படும்’’ என்றவர் இதற்கான சிகிச்சை முறைப் பற்றி விவரித்தார்.

‘‘இழந்த முடியினை மீட்டெடுக்க முறையான சிகிச்சை முறையினை கடைப்பிடிக்க வேண்டும். சிலர் இரண்டு மாசம் சின்சியரா செய்வாங்க. அதன் பிறகு அப்படியே விட்டுடுவாங்க. அப்படி இல்லாமல் டாக்டரின் ஆலோசனை பேரில் தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம். இதில் வழுக்கை அதிக அளவு ஏற்பட்டால் அதற்கு PRP (platelet rich plasma) சிகிச்சை மேற்கொள்ளலாம். நம்முடைய ரத்தத்தை எடுத்து அதில் உள்ள பிளேட்லெட்களை மட்டும் தனியாக பிரித்து அதை வழுக்கை உள்ள பகுதியில் ஊசி மூலமாக செலுத்துவது. மேலும் மருந்துகளையும் டாக்டரின் ஆலோசனை படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்தால், 50 வயதில் வழுக்கை பிரச்னை உள்ளவர்களுக்கும் முடி மீண்டும் வளரும். அதே சமயம் மாத்திரைகளை மட்டுமே நம்பாமல் ஊட்டச்சத்துள்ள உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். புரதம், மட்டை, சிக்கன், பச்சை காய்கறிகள், கீரை வகைகள் என நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய கூட்டு, காய் பொரியல் போன்ற சாதாரண உணவினை சாப்பிட வேண்டும்.

மேலும் ரத்த சோகை பாதிப்பு ஏற்படாமல் இருக்க தினமும் டேட்ஸ், பாதாம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட தினமும் உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ துறை மற்றும் டெக்னாலஜி இரண்டுமே நாளுக்கு நாள் பல முன்னேற்றத்தினை அடைந்து வருவதால், எந்த விதமான பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்’’ என்றார் சருமம் மற்றும் அழகியல் மருத்துவர் ஸ்வேதா ராகுல்.

தொகுப்பு: ஷம்ரிதி

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: