தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்; திருவள்ளூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

* திமுக கொடி, தோரணங்கள், தலைவர்கள் கட்-அவுட்டுகளால் விழாக்கோலம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் இன்று மாலை நடைபெறும்  மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதையடுத்து  முதல்வரை  வரவேற்று திமுக  கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில், திருவள்ளூரில்  இன்று மாலை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விழா பேரூராற்றுகிறார்.

இதையொட்டி மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வரை வரவேற்க திமுகவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருவள்ளூரில் இருந்து விழா நடைபெறும் மேடை வரை திமுக கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. வழி்நெடுக  பெரியார் , அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

பால்வளத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு நாசர், மாவட்ட செயலாளர்கள் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கூட்டத்தை மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

திருவள்ளூர், ஐசிஎம்ஆர் அருகே கலைஞர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் இடையூறின்றி நிறுத்தம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆவடி தொகுதி, கும்மிடிப்பூண்டி தொகுதி பொன்னேரி தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் மேடைக்கு பின்புறம் நிகேதன் பாடசாலை பள்ளியின் பின்புறம் நிறுத்த வேண்டும்.  திருத்தணி தொகுதி, திருவாலங்காடு, கடம்பத்தூர் ஒன்றிய நிர்வாகிகள், திருவள்ளூர் நகர நிர்வாகிகள், பூந்தமல்லி ஒன்றியம் மற்றும் நகர நிர்வாகிகள் மேடைக்கு எதிர் திசையில் திருவள்ளூர் செல்லும் சாலைக்கு அப்பால்  நிறுத்த வேண்டும்.

அதே போல் பூண்டி ஒன்றியம், ஊத்துக்கோட்டை நிர்வாகிகள் சாய்பாபா கோயிலுக்கு பின்புறம் நிறுத்த வேண்டும். வாகன நிறுத்தத்தில் சம்மந்தப்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகம் சார்பில் எடுத்து வரப்படும் வாகனங்களை நிறுத்த வேண்டும். குறித்த நேரத்திற்குள் வாகனங்களில் அழைத்து வருபவர்களை விழா அரங்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் அமர்த்த வேண்டும் என்று அமைச்சரும், மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  

பொதுக்கூட்ட மேடை அருகே பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,

மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது உருவங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் கட் அவுட்டுகள் பிரமாண்டமாக அமைக்கப் பட்டுள்ளது. அதே போல் பூந்தமல்லியிலிருந்து பொதுக்கூட்ட மேடை வரை ஆங்காங்கே  கலைஞர், முதல்வர் ஆகியோர உருவப்படங்கள் மின்விளக்கால் ஆன கட்அவுட்டுகளும், திமுக கொடியும் பறக்கவிட்டு வரவேற்புக்கு தயாராகி வருகின்றனர். இருசக்கர வாகனம், கார், பஸ், வேன் போன்ற வாகனங்களில் வருபவர்கள் பாதுகாப்பாக வந்து செல்ல காவல் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: