குடியரசு நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம் சென்னையில் பாதுகாப்பு பணிக்காக 6,800 போலீசார் குவிப்பு: தேசியக்கொடியை ஆளுநர் ஏற்றி வைப்பார்; அண்ணா பதக்கத்தை முதல்வர் வழங்குகிறார்

சென்னை: குடியரசு தினவிழா 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றுகிறார். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிக்கிறார். சென்னையில் 6,800 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநகரம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 74வது குடியரசு நாள் விழா 26ம் தேதி (நாளை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றி வைப்பார். தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்.

இதற்காக, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், மெரினா கடற்கரை அருகே உழைப்பாளர் சிலை அமைந்துள்ள பகுதியில் குடியரசு தின விழா நடைபெறுகிது. அதன்படி நாளை (26ம் தேதி) காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைப்பார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடிக்கு மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். பின்னர் பதக்கம், பாராட்டு சான்றிதழ் பெற்றவர்கள் அனைவரும் ஆளுநர், முதல்வருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வர். சென்னையில் தேசியக்கொடி ஏற்றப்படும் மெரினா காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் என 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சிங்கா, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான தாம்பரம், மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் வாகன தணிக்கைகளும் மேற்கொள்கிறார்கள்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்ச்சியின்போது பள்ளி மாணவ - மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பொதுமக்கள், மாணவர்கள் குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் பார்க்கவும் தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* டிரோன்கள் பறக்க 2 நாள் தடை

மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும், சென்னை பாதுகாப்பு பிரிவின் காவலர்கள் தலைமையில் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு, மோப்பநாய் பிரிவு மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படை பிரிவினருடன் இணைந்து நாசவேலை தடுப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: