திருவள்ளூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: முதல்வர் சிறப்புரை, 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

சென்னை: திருவள்ளூரில் திமுக சார்பில், இன்று நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இதில், 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்தி திணிப்பு போராட்டங்களில் பங்கேற்று உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் கூடி ஜன.25ம் தேதி திமுக சார்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் திமுக நிர்வாகிகள் செய்துள்ளனர். இதற்காக, திருவள்ளூர், வேடங்கி நல்லூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, சமன்படுத்தும் பணிகள் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. முதலமைச்சருக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் கட்சியின் நிர்வாகிகள் கொடிக் கம்பம் நடுதல், வண்ண மின்னொளி அலங்காரம் அமைத்தல் போன்ற முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மாவட்டம் முழுவதும் திமுகவினர் பல்லாயிரக்கணக்கானோரை பங்கேற்க திட்டமிட்டு அதற்கான கூட்டம் நடத்தும் பணிகளும் நடைபெற்றுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உத்தரவின்பேரில், திருவேற்காடு நகர திமுக சார்பில், திமுகவினர் நகர செயலாளர் நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்கின்றனர். இதற்காக 15 பேருந்துகள், 40 வேன்கள் 50க்கும் மேற்பட்ட கார்களில் திருவேற்காட்டிலிருந்து இன்று பிற்பகலில் திருவள்ளூருக்கு செல்கின்றனர். இதில் திமுக நகர நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

அதே போல, பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி வழிகாட்டுதலின்படி, பூந்தமல்லி நகர திமுக சார்பில், நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை ஏற்பாட்டில் திருவள்ளூரில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்கின்றனர். இதில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத்தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி லயன் ஜே.சுதாகர், நகர நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக 50க்கும் மேற்பட்ட வேன்கள், 80 கார்களில் ஏராளமான திமுகவினர் திருவள்ளூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: