தரமணியில் பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் தேங்கும் கழிவுநீர்: குடிநீரில் கலப்பதாக மக்கள் புகார்

வேளச்சேரி: தரமணி பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் சாலையில் தேங்குகிறது. மேலும், குடிநீரில்  கழிவுநீர்  கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னை பெருமாநகராட்சி, அடையாறு மண்டலம்-13, 178வது வார்டுக்கு உட்பட்ட தரமணி, மகாத்மா காந்தி நகரில் மொத்தம் 26 தெருக்கள் உள்ளன. இங்கு 2000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.  இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகிறார்கள்‌. இந்த பகுதியில் 26 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டது. அதேபோல், வீடுகளுக்கு குடிநீர்    இணைப்பும் 20 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது.

தற்போது, நெம்மேலி குடிநீர் திட்டத்தின் கீழ் ஒருநாள் விட்டு ஒருநாள் காலை 6 மணி முதல் 8 மணி வரை குடிநீர்  வழங்கப்படுகிறது. அப்போது, இப்பகுதி மக்கள் தண்ணீரை பாத்திரங்களில் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கிறார்கள். பல ஆண்டுகளாக பாதாள சாக்கடையில்   அவ்வப்போது அடைப்பு ஏற்படும். அதனால் பாதாள சாக்கடை  மூடிகள் வழியே கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கும். இதுகுறித்து அடையாறு இந்திரா நகரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்தால் ஊழியர்கள் வந்து சரிசெய்வர். அல்லது கழிவுநீரை டேங்கர் லாரிகளில் நிரப்பி‌ எடுத்து செல்வர். பின்னர்,  இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து  மீண்டும் கழிவுநீர் அடைப்பு ஏற்படும்.

மீண்டும் கழிவுநீர் சாலையில் வெளியேறி தேங்கும்.  இதே நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. சமீபத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு   பீலி அம்மன் கோயில் தெரு, மகாத்மா காந்தி நகருக்குட்பட்ட மசூதி தெரு, ராஜாஜி தெரு, டி.கே. கபாலி தெரு ஆகிய தெருக்களில் உள்ள பாதாள சாக்கடை மூடிகள் வெளியே கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனால், கடும்  துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தொடர்ந்து மாதக்கணக்கில் சாலையில் கழிவுநீர் தேங்குவதால் பாசிகள் வளர்ந்துள்ளது. அதனால் சாலையில் நடப்பவர்கள் சறுக்கி கீழே விழுந்து காயம் அடையும் அபாயம் உள்ளது.

பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற நிலை  நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக   குடிநீரில்   கழிவுநீர் கலந்து வருகிறது. இந்த கழிவுநீர் கலந்த நீரை குடிப்பதால் அடிக்கடி இந்த பகுதி மக்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. மேலும் தண்ணீரை  குளிக்க பயன்படுத்தும்போது   உடலில் அரிப்பு   மற்றும் தோல் சம்பந்தமான நோய்களும்  வருகிறது.  தொடர்ந்து சாலையில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை    என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால்,  வாரிய உயரதிகாரிகள் உடனடியாக  இந்த பகுதியை பார்வையிட்டு   பாதாள சாக்கடை அடைப்பு மற்றும்  குடிநீரில் கழிவுநீர்  கலப்பதை தடுக்க  நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: