2022-23ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: மாவட்ட அளவிலான 2022-23ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்காக, பரிசுத்தொகை ரூ.25 கோடி உட்பட ரூ.47.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் முதல் முறையாக பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளுக்கு பல்வேறு போட்டிகள் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கும் விதமாக நேற்று ராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தில் கால்பந்து, கபடி மற்றும் இறகுப்பந்து விளையாட்டு போட்டிகளையும், கோடம்பாக்கம் மண்டலம், தி.நகர், நடேசன் பூங்கா எதிரில் உள்ள கண்ணதாசன் மைதானத்தில் கூடைப்பந்து, சிலம்பம் மற்றும் சதுரங்க  விளையாட்டி போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மேயர் ஆர்.பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, துணை மேயர் மகேஷ்குமார், துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், துணை ஆணையாளர் சினேகா, வட்டார துணை ஆணையாளர்கள் எம்.சிவகுரு பிரபாகரன், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், நிலைக்குழு தலைவர் சிற்றரசு, நியமன குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், மண்டல குழு தலைவர்கள் எஸ்.மதன்மோகன், எம்.கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: