மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த அதிமுகவுக்கு மாற்று இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை (இன்று) பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க கோரி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் அளித்த மனு பரிசீலிக்கபடவில்லை என்று  கோவை மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் ஜேம்ஸ் ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக சார்பில் வழக்கறிஞர் சி.அய்யப்பராஜ் ஆஜராகி, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முப்பது ஆண்டுகளாக மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று கூறினார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி கடந்த 6ம் தேதியே திமுக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதிமுக சார்பில் 7ம் தேதிதான் விண்ணப்பிக்கப்பட்டது. எனவே, அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த திமுகவிற்கு அனுமதி அளிக்க உள்ளதால் மனுதாரர் மாற்று இடமாக பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி மகால் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த விரும்பினால், அதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து, பல்லடம் சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி புதிய விண்ணப்பம் அளிக்க அதிமுகவிற்கு உத்தரவிட்ட நீதிபதி, அதன் அடிப்படையில் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: